ராஜபக்ஷர்களின் அரசியலால் கேள்விக்குறியான இளம் பெண்ணின் வாழ்க்கை?

Report Print Vethu Vethu in அரசியல்

அண்மையில் மஹரகம பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ராஜபக்ஷகளின் பதாதை ஒன்று முறித்து விழுந்ததில் பெண்ணொருவரின் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மஹரகம பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிக்கும் வகையில் பாரிய பதாதை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த பதாதை முறிந்து விழுந்தமையினால் பல வாகனங்கள் சேதமடைந்ததுடன் 27 வயதான சுலரி லக்னிமா பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்.

குறித்த பெண்ணின் இடுப்பின் கீழ் பகுதி செயலிழந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் நரம்பு மண்டலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட காலத்திற்கு வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெறும் அவல நிலைக்கு சுலரி லக்னிமா தள்ளப்பட்டுள்ளார்.

காலியை சேர்ந்த சுலரி வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக கடந்த எட்டாம் திகதி மஹரகமவிலுள்ள ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு சென்ற வேளையில் இந்த அனர்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

பொதுஜன பெரமுனவை சேர்ந்த முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் உபாலி கொடிகார, அவரது மனைவி முன்னாள் மஹரகம முதல்வரும், பொதுஜன பெரமுன அமைப்பாளருமான காந்தி கொடிகார ஆகியோர் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக மஹிந்த, கோத்தபாய அடங்கிய பாரிய பதாதையை காட்சிப்படுத்தியிருந்தனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொள்ளவிருந்தமை குறிப்பிடத்தக்கது.