ரணில்- சஜித் - கரு இடையில் முக்கிய பேச்சுவார்த்தை

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில், முக்கியமான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அந்த கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச இடையில் இவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்ததுடன் அவை எந்த இணக்கமும் இன்றி முடிவடைந்தன.

இந்த நிலையில், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை பலன் தரக் கூடியதாக இருக்கும் என இதனை ஏற்பாடு செய்ய தலையீடுகளை மேற்கொண்ட இருத்தரப்பு அமைச்சர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதனிடையே பிரதமர் ரணில் தரப்பை சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர் நேற்று சபாநாயகர் கரு ஜய ஜயசூரியவின் இல்லத்தில் அமைச்சர் சஜித்தை சந்தித்து ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டுள்ள வேட்பாளர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கு புதிதாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படையற்றவை எனவும் அப்படியான எந்த தயார் நிலைகளும் இல்லை எனவும் அந்த அமைச்சர் சஜித்திடம் கூறியுள்ளார்.

அதேவேளை கண்டி யட்டிநுவர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் அமைதியான முறையில் நடப்பதாக கூறியுள்ளார்.

இதனிடையே சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க, கட்சியின் தலைவர்கள் இடையில் இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என நம்புவதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.