மங்களவை வறுத்தெடுத்த மைத்திரி

Report Print Aasim in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தொலைபேசி மூலம் அமைச்சர் மங்கள சமரவீரவை வறுத்தெடுத்த சம்பவம் ஒன்று நேற்றிரவு நடைபெற்றுள்ளது.

அங்கவீனமுற்ற ராணுவ சிப்பாய்களின் ஓய்வூதியம் மற்றும் சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அங்கவீனமுற்ற ராணுவச் சிப்பாய்கள் தொடர்ச்சியான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்துக்கு நாளுக்கு நாள் பொதுமக்களின் அவதானம் திரும்பத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு அமைச்சர் மங்கள சமரவீரவைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, அங்கவீனமுற்ற ராணுவ வீரர்களின் கோரிக்கைக்கு சாதகமான முறையில் ஏதாவது செய்யுமாறு அவரிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் மங்கள சமரவீர, சேர், திறைசேரியில் அதற்கான நிதிவளம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற ஜனாதிபதி மைத்திரி, உமக்கெல்லாம் இதற்கு மட்டும் தான் பணமில்லை போலும்.. ஆனால் மற்ற எல்லா விடயத்துக்கும் செலவழிக்க திறைசேரியில் போதுமான பணம் இருக்கின்றது போலும் என்று கடுமையான வார்த்தைகளில் திட்டிவிட்டு தடால் என்று தொலைபேசியைச் சாத்தியுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது அங்கவீனமுற்ற ராணுவ வீரர்களின் கோரிக்கை தொடர்பில் தனது சார்பில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்பிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால கூறியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.