நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு இதுதான்! முன்னாள் அமைச்சர்

Report Print Navoj in அரசியல்

இனவாதமும், மதவாதமுமின்றி இனிமேல் இலங்கையில் அரசியல் செய்ய முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டிருப்பது இந்த நாட்டுக்கு ஒரு சாபக்கேடானது என்றும் இது கவலையளிப்பதாகவும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - ஏறாவூரில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்,

ஏறாவூரிலுள்ள எந்தவொரு அரசியல்வாதியும் இப்பிரதேச மக்களும் எந்தச் சந்தர்ப்பத்திலும் இன, மத தீவிரவாதத்திற்கோ, பயங்கரவாதத்திற்கோ துணைபோனவர்களல்ல.

அதேவேளை ஏறாவூர் பிரதேச மக்கள் இனவாதத்தாலும், பயங்கரவாதத்தாலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள், கடந்த 1985ஆம் ஆண்டிலிருந்து இப்பிரதேச மக்கள் படுகொலைகள், இடப்பெயர்வுகள், வாழ்விட வாழ்வாதார இழப்புக்களைச் சந்தித்து வந்திருக்கிறார்கள்.

ஏறாவூரில் 1990இல் இடம்பெற்ற படுகொலையில் ஒரே இரவில் 121 பேரை இழந்தவர்கள். எவ்வாறாயினும், இப்பிரதேச மக்களும் எந்தவொரு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் எச்சந்தர்ப்பத்திலேனும் பொறுமை இழக்கவில்லை.

அவர்கள் நிதானத்துடன் செயற்பட்டு இந்த நாட்டின் ஐக்கியத்திற்காகவும், சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவதற்காகவும் விசுவாசமாகச் செயற்பட்டு உழைத்துள்ளார்கள்.

இன்றுவரை இவ்வூர் மக்கள் தமது ஆயிரக்கணக்கான வாழ்விடங்களையும், வாழ்வாதார நிலங்களையும் இழந்துள்ள போதிலும் அவர்கள் பொறுமை இழக்காது செயற்பட்டு வருகின்றார்கள்.

ஏறாவூர் நகர் பிரதேச மக்கள் கடந்த சுமார் 20 வருடங்களுக்குக் கிட்டத்தட்ட ஒரு திறந்தவெளி அகதி முகாம் போலவே வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்கள்.

இதை ஒரு அதி உச்ச பொறுமை காத்த மெச்சத்தக்க நிகழ்வாகவே வரலாற்றில் பதிவு செய்ய முடியும்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கால சரித்திர நூல்களிலும் ஏறாவூர் மக்களின் ஐக்கிய சக வாழ்வுக்கான வாழ்க்கை முறைப்பற்றி சிலாகித்துக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்புக்கள் எல்லாம் பெருமை தருவதாக இருக்கின்ற போதிலும் தற்போது நாட்டில் உருவெடுத்துள்ள இன, மதவாத அரசியல் போக்கு ஒரு நச்சு சுழலாக மட்டக்களப்பிலும் பரவத் தொடங்கியுள்ளது.

இங்குள்ள ஒரு சில அரசியல்வாதிகளும் கிறீஸ் பூதம் வெளிவந்து மக்களைப் பீதிகொள்ளச் செய்ததுபோல் இனவாத கறுப்புப் பூதமாக அச்சுறுத்தத் தொடங்கியுள்ளார்கள்.

இவ்வாறான இன, மத வாதத்தினூடாக அவர்கள் எதை அடைய நினைத்தாலும் அது செயலிழந்து போன ஒன்றாகவே எதிர்காலத்தில் வரலாறு பதியப்படும் என்பதையும் அத்தகைய இழிகுண அரசியல்வாதிகள் வரலாற்றிலிருந்து மறைந்து போவார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும், இனமதவாதத்திற்கும் தீணிபோட இந்த நாட்டில் எவரும் முனையக் கூடாது என்பதை எதிர்கால சமுதாயத்திற்கு உறுதிப்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Latest Offers