வேட்பாளராக சஜித்தை அறிவிப்பது மாத்திரமே எஞ்சியுள்ளது! ஐதேகவின் முக்கியஸ்தர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

அமைச்சர் சஜித்பிரேமதாஸ ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்று உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பது மாத்திரமே தற்போது மிகுதியாகவுள்ளது என அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐக்கிய தேசிய கட்சி தனித்து தீர்மானங்களை முன்னெடுக்க முடியாது. கட்சியின் செயற்குழு, கட்சியின் நாடாளுமன்ற குழுவின் ஊடாகவே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்று கட்சியின் தலைவர் பிரதமர்ரணில் விக்ரமசிங்க, பொதுச்செயலாளர் அகில காரியவசம் ஆகியோர் தெரிவித்தார்கள்.

கட்சியின் செயற்குழுவில் 69 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள். இந்நிலையில் செயற்குழுவின் உறுப்பினர்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமரும், உறுப்பினர் அதிகரிப்பிற்கு அவசியம் கிடையாது என கட்சியின் பொதுச்செயலாளரும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆகவே இவ்வாறான மாறுபட்ட கருத்துக்களின் ஊடாக ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு இன்னும் இழுத்தடிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகவே கட்சியின் முக்கிய தரப்பினர் இருவரும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றிப் பெறுவதற்கான அனைத்து தரப்பினரது ஆதரவும் முழுமையாக காணப்படுகின்றது.

ஆகவே இவர்தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவிப்பது மாத்திரமே மிகுதியாகியுள்ளது. இவ்விடயத்தில் கட்சியின் தலைமைகள் பெரும்பாலான ஆதரவு எத்தரப்பினருக்கு உண்டு என்பதை நாட்டின் எதிர்காலம் கருதி மதிப்பிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers