எழுக தமிழ் - கற்க வேண்டிய பாடம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

பெரும் ஏற்பாடுகளுடனும் பிரசாரங்களுடனும் ஒழுங்கு செய்யப்பட்ட எழுக தமிழ் நிகழ்வு- எதிர்பார்த்த முடிவுகளைத் தராமல் முடிந்து போயிருக்கிறது.

நல்லூர் வீதியிலும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மைதானங்களிலும், தன்னார்வமாக இலட்சத்தை தொட்ட மக்களின் பங்களிப்புடன் நடந்தேறிய எழுச்சி போராட்டங்கள் பலவற்றை நேரில் கண்ட யாழ்ப்பாண மக்களுக்கு, முற்றவெளியில் கடந்தவாரம் நடந்தேறியது ஒரு சின்ன நிகழ்வு தான்.

1986 மேதினப் பேரணிக்காக, நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றிலில், திரண்ட மக்கள் கூட்டத்துடன், 1987இல் பிரபாகரனின் சுதுமலைப் பிரகடன நிகழ்வில், அதே ஆண்டு தியாகதீபம் திலீபனின் உண்ணா நோன்பில், 1990-1995 காலப்பகுதியில் யாழ். பல்கலைக்கழக மைதானத்தில் நடந்த மேதினப் பேரணிகளில், அதற்குப் பின்னர் பொங்கு தமிழ் நிகழ்வுகளில், தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் பங்கேற்றது வரலாறு.

கடந்த திங்கட்கிழமை முற்றவெளி மைதானத்தில், ஓரிரு ஆயிரம் பேருடன் நடந்தேறிய எழுக தமிழ் நிகழ்வுக்குப் பின்னர், பேரெழுச்சியுடன் எழுக தமிழ் என்று, ஊடகங்கள் தான் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. செய்திகளில் பேரெழுச்சி இருந்ததே தவிர, உண்மை அவ்வாறாக இருக்கவில்லை.

எழுக தமிழ் நிகழ்வு தோல்வி கண்டு விட்டது, விக்னேஸ்வரன் மூக்குடைபட்டுக் கொண்டார் என்று குறுகிய சிந்தனைகளுடன் இதனைப் பார்க்கக்கூடாது. பார்க்கவும் முடியாது. அதற்கு அப்பால், இதனை நோக்க வேண்டும்.

இந்த நிகழ்வு தமிழ் மக்களுக்கு, தமிழ் அரசியல் தலைமைகளுக்கு மீண்டும் ஒரு பாடத்தை கொடுத்திருக்கிறது. இது ஒரு தோல்வி அல்ல. பாடம்.

எழுக தமிழ் நிகழ்வுக்காக விடுக்கப்பட்ட முழுஅடைப்பு போராட்டம் பல இடங்களில் வெற்றி பெற்றது. அதனை வைத்து மக்களின் ஆதரவு இருந்ததால் தான் முழு அடைப்பு வெற்றி பெற்றது, எனவே இது தோல்வியில்லை என்று நொண்டிச் சாட்டுச் சொல்லிக் கொண்டிருந்தால் நிச்சயம் பாடம் கற்க முடியாது.

முழு அடைப்பு என்பது எழுக தமிழ் அல்ல. அது எழுக தமிழ் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு வசதியாக இருக்கும் என்று ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு துணை நிகழ்வு.

ஓரணியாக நின்று குரல் கொடுப்பது தான் எழுக தமிழ். அது தான் பிரதானமானது.

15 ஆயிரம் பேரைத் திரட்ட முனைந்த தமிழ் மக்கள் பேரவை, முழு அடைப்பு வெற்றி பெற்று விட்டது என்ற அற்ப திருப்தியுடன் முடித்துக் கொள்ள முடியாது,

பல கள யதார்த்தங்களை புறக்கணித்து, திட்டமிடல்களை முன்னெடுத்தது, அரசியல் ஆதாய இலக்குடன் இதனை நிறைவேற்றிக் கொள்ள முற்பட்டது தான், இந்த தோல்விக்கு முக்கிய காரணியாக இருக்கிறது.

இந்த நிகழ்வு பிசுபிசுத்துப் போனதற்கும், இதற்குப் பின்னர் ஏற்படப் போகும் விளைவுகளுக்கும், சம்பந்தப்பட்ட அனைவரும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள்.

எழுக தமிழ் நிகழ்வு தவறானது அல்ல. அதில் முன்வைக்கப்பட்ட கோசங்களும், கோரிக்கைகளும் தவறானவை அல்ல. அவை தமிழ் மக்களின் பிரச்சினைகள், அவர்களின் கோரிக்கைகள் தான்,

ஆனாலும் எழுக தமிழ் ஏன் வெற்றியளிக்கவில்லை? என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது.

போருக்குப் பிந்திய 10 ஆண்டுகளில் தமிழ் மக்களின் உணர்வுகள் மழுங்கி விட்டன, அவர்களின் கவனம் இப்போது திரும்பி விட்டது, உரிமைகள், பிரச்சினைகளின் மீது அவர்கள் கவனம் செலுத்தவில்லை, சொகுசு வாழ்க்கைக்குப் பழகி விட்டார்கள், என்றெல்லாம், பலரும் வசைபாடுவதையும் காணமுடிகிறது.

இந்தக் கருத்துக்களை அடியொற்றி முடிவுகளை எடுத்தால், தமிழ் மக்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் புறக்கணிப்பதாக அமைந்து விடும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமது பிரச்சினைகளுக்காக வீதிக்கு வரத் தயங்குகிறார்கள். நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கிப் போக நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்தோ காரணியோ அல்ல.

இந்தநிலைமைக்கு முக்கியமான காரணம், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகள் தான். தமிழ்க் கட்சிகள் அனைத்தும், ஒரே குடையின் கீழ் செயற்பட்ட போது, தமிழ் மக்கள் ஆதரவு கொடுத்தனர்.

ஆனால் இப்போது, தனித்தனியாகப் பிரிந்து மோதிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகளுக்கிடையில் சிக்கிக் கொள்ள விரும்பாமல், இருக்கவே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள்.

இந்த எழுக தமிழ் நிகழ்வினால், தமிழ் மக்களையும், தமிழ் அரசியல் கட்சிகளையும் வழிப்படுத்தும் சிவில் சமூகம் ஒன்றின் வெற்றிடம் வெகுவாக உணரப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்வுக்கு ஆதரவு வழங்கும் அமைப்புகளின் நீண்ட பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த அமைப்புகள் ஒவ்வொன்றும் 100 பேரைக் கொண்டு வந்திருந்தால் கூட, எழுக தமிழ் பேரணியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை, சுலபமாக 6000 பேரைத் தாண்டியிருக்க முடியும்.

அவ்வாறாயின், இந்த அமைப்புகளின் ஆதரவு வெறும் வாய்ச்சொல் வீரம் தானா அல்லது, அந்த அமைப்புகள் வேண்டா வெறுப்பாக ஆதரவு கொடுத்தனவா? இல்லை, இந்த அமைப்புகள் ஆதரவு தருகின்றன என்று ஏற்பாட்டாளர்கள் தவறாக வழிநடத்தினரா?

தமிழ் மக்கள் பேரவை பல்வேறு பொது அமைப்புகளின் பின்னணியில் இயங்குகின்ற அமைப்பாக இருந்தாலும், அதனை ஒரு அரசியல் சார்பற்ற பொது அமைப்பாக கட்டியெழுப்ப தவறியது மிக முக்கியமான தோல்வி.

தமிழ் மக்கள் பேரவை தொடங்கப்பட்ட போது அதன் நோக்கம் குறித்த பலத்த கேள்விகள் எழுந்தன. அந்த சந்தேகங்களில் முழுமையான நியாயப்பாடுகளும் இருந்தன.

வெளிப்படையாக கூறுவதாயின் கூட்டமைப்பை சிதைக்கும் நோக்கம் இருந்தது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதனைக் கண்டு கூட்டமைப்புக் கூட கலக்கமடைந்தது.

அப்போது கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவை ஒருபோதும் அரசியல் சார்புடைய அமைப்பாக இருக்காது. மக்கள் அமைப்பாகவே இருக்கும், கூட்டமைப்பின் பாதையை செம்மைப்படுத்துமே தவிர சிதைக்காது என்று கூறியிருந்தார்.

காலப்போக்கில், அந்த வாக்குறுதி பொய்யாகிப் போனது. தமிழ் மக்கள் பேரவையின் மேடையிலேயே, சி.வி.விக்னேஸ்வரன் தனது புதிய கட்சியை அறிவித்து, அரசியல் சார்பின்மைக்கு முழுக்குப் போடப்பட்டது.

அங்கேயே தமிழ் மக்கள் பேரவையின் வீழ்ச்சியும், தனித்துவமும் சிதைந்து விட்டது.

மூன்றாவது எழுக தமிழ் நிகழ்வை வெற்றிகரமாக ஒழங்கமைக்க முடியாது போனதற்கு, தமிழ் மக்கள் பேரவையின் இந்த சரிவும் ஒரு காரணி தான்.

தமிழ் மக்கள் பேரவை தான் தனக்குத் தானே அரசியல் சார்பற்ற அமைப்பு என்று கூறிக் கொள்கிறதே தவிர, அதன் செயற்பாடுகள் முழுமையாக அரசியல் நோக்கம் கொண்டவை தான்.

இதனை வெளியே இருக்கும் யாரும் கூற வேண்டியதில்லை. பேரவையை உருவாக்கி, அதன் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபட்டிருந்த கட்சிகள் கூட, அதனைக் கூறத் தொடங்கியிருக்கின்றன.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு தான், இந்த தோல்வியின் பாடம் கற்கப்பட வேண்டுமே தவிர, பேரணியில் பங்கேற்ற மனித தலைகளின் எண்ணிக்கையை வைத்து தோல்விக்கான காரணிகளை ஆராயக் கூடாது.

பொதுவாக, எதிரும் புதிருமான தரப்புகளை ஒன்றிணைக்கக் கூடிய சக்தி வாய்ந்தவர்களாக மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள், பிரமுகர்கள் இருப்பது வழமை.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் வந்தபோது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் கூட்டமைப்பையும் ஒரே அரங்கிற்கு கொண்டு வந்து பேசக்கூடிய வல்லமை பெற்றவராக மன்னார் ஆயர் இராயப்பு யெசேப் ஆண்டகை இருந்தார்.

அவர் நோயுற்ற பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் பலமான பிளவுகளை சந்தித்திருக்கின்றன நிலையில், பொது நோக்கத்துக்காக தமிழ் மக்களின் பலத்தை – அபிலாசைகளை- பிரச்சினைகளை தீர்க்கக் கோரி எல்லா தரப்புகளையும் ஒருங்கிணைக்கக் கூடிய, ஒரு பொதுத் தரப்பு அல்லது தளம் இன்று தமிழர் தரப்பில் இல்லை.

கொழும்பு அரசியலில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச போன்ற அரசியல் எதிரிகளை பல இடங்களில்- ஒரு நிகழ்வில் அடிக்கடி காண முடியும். அவர்கள் பொது நோக்கத்துக்காக ஒரே இடத்துக்கு வருவார்கள்.

அவர்களை வரவழைக்கக் கூடிய வல்லமை பெற்ற பௌத்த மத பீடங்கள் இருக்கின்றன. பொது அமைப்புகள் இருக்கின்றன. அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல், அதேவேளை எல்லோரதும் அபிமானத்தைப் பெற்ற தனிநபர்களும் இருக்கிறார்கள்.

அவர்கள் அந்த மூவரையும் தேவையான இடத்துக்கு தேவையான நேரத்தில் கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.

இதுபோல தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை, தலைவர்களை ஒருங்கிணைக்கக் கூடிய, ஒரே இடத்துக்குக் கொண்டு வரக்கூடிய நிலையில், தமிழர் தரப்பில் யாருமில்லை.

புலிகளும் அதற்குப் பின்னர் மன்னார் ஆயரும் கொண்டிருந்த வகிபாகத்துக்கு, வெற்றிடம் ஏற்பட்ட போது -அதனை தமிழ் மக்கள் பேரவை நிரப்பியிருக்கலாம். அதற்கான வாய்ப்பை அந்த அமைப்பு தொலைத்து விட்டு நிற்கிறது.

அது மட்டுமல்லாமல், இன்னொரு பொது தளத்தை உருவாக்க முடியாத நிலையையும் தமிழ் மக்கள் பேரவை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

இனி பொது தளத்துடன் ஒரு அமைப்பு கட்டியெழுப்பப்பட்டாலும், அதனை எல்லா அரசியல் கட்சிகளும் சந்தேகத்துடன் உற்று நோக்குகின்ற நிலையே ஏற்படும். அவர்களின் பின்னணியை அலசுகின்ற, அந்த முயற்சிகளைக் குழப்புகின்ற வேலைகளே நடக்கும்.

தமிழ் அரசியல் பரப்பில் எதிரும் புதிருமான தரப்புகளை ஒருங்கிணைப்பது இன்றைய நிலையில் முக்கியமானது.

ஏனென்றால், சிங்கள அரசியல் தலைமைகள் தமது பொது நலன்களுக்காக ஒன்று கூடுவார்கள். தமது இருப்புக்கு பங்கம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வார்கள்.

ஆனால் தமிழர்கள் தரப்பில் அவ்வாறான நிலை இல்லை. இந்த இக்கட்டான சூழலில், தமிழர் தரப்பில் உள்ள அரசியல் தரப்புகளை ஒருங்கிணைக்கும் வலுவான வாய்ப்புகளை, எழுக தமிழ் மூலம் சிதைத்து விட்டு நிற்கிறது தமிழ் மக்கள் பேரவை.