ஐ.தே.கட்சி வடக்கு மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளது: தயாசிறி ஜயசேகர

Report Print Steephen Steephen in அரசியல்

வடக்கில் உள்ள தமிழ் மக்களை ஏமாற்றும் வேலைத் திட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தற்போது ஈடுபட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மாநாட்டில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த தவறையும் செய்யவில்லை. நாங்கள் எங்கள் தலைவருடன் எமது கட்சியினர், பொதுஜன பெரமுனவினரை ஒரு குடையின் கீழ் பாதுகாத்து கடந்த நான்கரை ஆண்டுகள் கூட்டி சென்றோம்.

எனினும், குடைக்குள் இருந்த பொதுஜன பெரமுனவினர் மழை பெய்யும் போது எமது வயிற்றில் குத்தினர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தளரவில்லை. சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் என்று சொன்னார்கள். நாங்கள் அப்படி செய்யவில்லை.

நாட்டை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் எமது கட்சியின் தலைவருக்கு பலத்தை பெற்றுக் கொடுத்தோம். 20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதாக கூறினார்கள், 19ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தனர். ரணில் விக்ரமசிங்கவினர் 20ஆவது திருத்தச் சட்டத்தை இதுவரை கொண்டு வரவில்லை. இதற்பு பதிலாக வேறு யோசனைகளை கொண்டு வந்துள்ளனர்.

வடக்கு பிரச்சினையை தீர்க்க நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறினார்கள். அடுத்த அரசாங்கத்தை அமைத்தும் வடக்கிற்கான பிரச்சினைகள் தீர்க்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுவதை பார்த்தேன். ரணில் விக்ரமசிங்க தற்போது வித்தை காட்ட பார்க்கின்றார். வடக்கு தமிழ் மக்கள் மீது ரணில் விக்ரமசிங்கவுக்கு அவசரமான அக்கறை வந்துள்ளது.

நான்கரை ஆண்டுகளாக புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவதாக கூறி இழுத்தடித்து கொண்டிருந்தனர். புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி ஒரு யோசனையை கொண்டு வரவில்லை.

அப்படி செய்த ரணில் விக்ரமசிங்க, தற்போது வடக்கிற்கு சென்று தான் வடக்கிற்கு சலுகைகளை வழங்க தயாராக இருப்பதாக கூறுகிறார். இது இந்த நாட்டின் வடக்கு மக்களை மீண்டும் ஏமாற்றும் வேலைத்திட்டம் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.