பயங்கரவாதத்தின் அதியுச்ச தலைவராகவே தமிழர்களுக்கு தென்படுகின்றார் கோத்தபாய! சரவணபவன் எம்.பி. சீற்றம்

Report Print Rakesh in அரசியல்

பெரும்பான்மை இனத்தவரை பொறுத்த வரையில் கோத்தபாய ராஜபக்ச கிடைத்தற்கரியவராக இருக்கலாம். ஆனால், எங்களுக்குப் பயங்கரவாதத்தின் அதியுச்ச தலைவராகவே தென்படுகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பலத்த போட்டிகளுக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார், தான் பதவிக்கு வந்ததும் அரசமைப்புத் திருத்தத்தை ஒரு வருடத்துக்குள் கொண்டுவந்து விடுவாராம்.

அடுத்ததாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறுகின்றார் ஆறு மாதங்களில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிடுவாராம். மூன்று மாதங்களில் முடிப்போம் என்று யார் கூறுகின்றார்கள் என்று பார்ப்போம்.

ஐக்கிய தேசியக் கட்சி தங்களுக்குள் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை. பிரச்சினைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டு செல்கின்றன.

கோத்தபாய ராஜபக்ச வென்றால் அவர் என்ன செய்வார் என்று தமிழர்கள் மனதில் ஒரு பயம் நிலவுகின்றது. அதில் எந்தத் தவறும் இல்லை.

எல்லோருக்கும் மனதில் பயம். பயமென்றால் கோத்தபாய, கோத்தபாய என்றால் பயம். இதில் எந்தவிதமான மாறுதல்களுக்கும் இடமில்லை.

அவருடைய அண்ணன் மஹிந்த ராஜபக்ச இருக்கும் காலத்தில் தமிழர்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பேன் என்று எவ்வாறு காலத்தை ஓட்டினாரோ அது போலத்தான் இவரும் காலத்தை ஓட்டுவார்.

உலக நாடுகளைத் திருப்திப்படுத்த அதைச் செய்கின்றோம், இதைச் செய்கின்றோம் என்பார்கள். எங்களுடைய மண்ணுக்கு வருவார்கள், கண்காட்சி வைப்பார்கள்.

தமிழர்களில் சிலரை மேடையேற்றுவார்கள், அதை விளம்பரப்படுத்துவார்கள். இவ்வாறுதான் வருங்காலம் ஓடப்போகின்றது.

மக்கள் விடுதலை முன்னணியினர்தான் வடக்கு - கிழக்கைப் பிரித்தனர். இப்போது அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகின்றனர்.

எல்லோருக்கும் அரசியல் செய்வதற்கு வடக்கு, கிழக்கு மக்கள் தேவை. ஆனால், அந்த மக்களுக்கு எதைச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை அவர்கள் எவரிடமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.