ரணிலுடன் பேசியது என்ன? சம்பந்தன் வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டவர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது இறுதி முடிவெடுக்கும் சூழல் அமைந்திருக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் சந்தித்து பேசுவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இன்று வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று இரா.சம்பந்தனிடம் கேள்வியெழுப்பியிருந்தது.

இதற்கு பதிலளித்து பேசிய அவர், “பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களை நேற்று சந்தித்து பேசியிருந்தோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு குறித்து பிரதமர் தரப்பிலிருந்து எடுத்து கூறப்பட்டது. அதேபோல் நாங்களும் எங்கள் தரப்பின் நிலைப்பாட்டினை எடுத்து கூறியிருந்தோம்.

மீண்டும் சந்தித்து பேசுவதென முடிவெடுத்துள்ளோம். இந்த சந்திப்பின் போது இறுதியான தீர்மானம் எடுக்கும் சூழல் இருக்கவில்லை.

ஒருமித்த, பிளவுபடாத, பிரிக்கப்படாத, பிரிபட முடியாத நாட்டிற்குள் அதியுயர்மட்ட அதிகாரப்பகிர்வு என்னவிதமாக அமைய வேண்டும், என்னவிதமாக அமைந்தால் அந்தக் குறிக்கோளை அடையலாம் என்ற பல விடயங்களைப் பற்றி மிகவும் தெளிவாக அவர்களுக்கு எடுத்து கூறியுள்ளோம்.

கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளை புறக்கணித்து நாங்கள் நடக்கவில்லை. இந்நிலையில், அரசியல் சார்ந்த விவகாரங்கள் காரணமாக நானும், சுமந்திரனும் கொழும்பில் அதிகமாக தங்கியிருக்கின்றோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.