அர்ஜுன் மகேந்திரன் விவகாரம்: மேல் நீதிமன்றத்தை நாடும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி

Report Print Gokulan Gokulan in அரசியல்
49Shares

அர்ஜுன் மகேந்திரன் கையெழுத்திட்டுள்ள நாணயத்தாள்களின் சட்டபூர்வத்தன்மை தொடர்பில் தெளிவுப்படுத்த மேல் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிங்கப்பூர் சட்டத்தின் படி அந்நாட்டு பிரஜை ஒருவர் இரட்டை பிராஜாவுரிமையை கொண்டிருக்க முடியாது. எனவே, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இலங்கை பிரஜை அல்ல என்பது உறுதியாகியுள்ளது.

அவ்வாறிருக்கையில், இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் சிங்கப்பூர் பிரஜை ஒருவர் கையெழுத்திட்டுள்ள இலங்கை நாணயத்தாள்கள் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற கேள்வி எல்லோருக்கும் உள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் 165ஆம் இலக்க சட்டத்தின்படி, இலங்கையின் அரச சேவையை பொறுப்பேற்பவர்கள் சத்தியப்பிரமாணம் செய்தே பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அர்ஜுன் மகேந்திரன் அவ்வாறு சத்தியப்பிரமாணம் எதுவும் செய்யாமலே மத்திய வங்கியின் ஆளுநராக பணியை பொறுப்பேற்றுள்ளார்.

சிங்கப்பூர் சட்டத்தின்படி அந்நாட்டு பிரஜை பிறிதொருநாட்டு அரசியலைமப்புச் சட்டங்களை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்வது குற்றமாகும்.

எனவே இலங்கை பிரஜை அல்லாத ஒருவர் கையெழுத்திட்டுள்ள நாணயத்தாள்கள் செல்லுபடியாகுமா என்பது தொடர்பில் ஆராய ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எதிர்வரும் வாரமளவில் மேல் நீதிமன்றத்தை நாடவுள்ளது என தெரிவித்துள்ளார்.