உண்மையான, நேர்மையான பௌத்தராக எனது தந்தை என்னை வளர்த்ததால்! திடசங்கற்பம் பூண்டுள்ள சஜித்

Report Print Sujitha Sri in அரசியல்

எனது தந்தையின் வெற்றிக்கும், தந்தைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணையை முறியடிப்பதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒத்துழைப்பு வழங்கியது போல, தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் தனது வெற்றியை முன்னிட்டு ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

அரசியல் மற்றும் பூகோள ரீதியில் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையை உன்னத நிலைக்கு கொண்டு வருதில் நான் கூடுதல் கவனம் செலுத்துவேன்.

நாட்டுப் பிரஜைகளான பௌத்தர்களும், இந்துக்களும், முஸ்லிம்களும் எனது நம்பகத்தன்மை பற்றி கிஞ்சித்தும் சந்தேகிக்கவோ அதுபற்றி இருமுறை சிந்திக்கவோ தேவையில்லை.

தீவிரவாதத்தை நான் ஆதரிப்பவனல்ல. ஆனால், அளுத்கம, அம்பாறை மற்றும் திகன முதலான சம்பவங்கள் ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலுக்கு வழிகோலியுள்ளதாக நம்பப்படுகின்றது.

மேலும், குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னணியின் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்த தீய சக்திகள் செயற்பட்டுள்ளன.

உண்மையான, நேர்மையான பௌத்தராக எனது தந்தை என்னை வளர்த்ததால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் சேவையாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளேன் என கூறியுள்ளார்.