ஏக்கங்கள் தீராத மக்கள்! பிடிவாதத்தில் மக்களின் பிரதிநிதிகள்

Report Print Jeslin Jeslin in அரசியல்

இலங்கையில் தற்போது ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தல் வியாபாரங்கள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன. தேசியக் கட்சிகள், வேட்பாளர்கள் ஆகியோர் தமது வியாபாரத்தினை மிகத் திறமையாக நடத்தும் அதே நேரம் சிறுபான்மை கட்சிகள் மற்றும் இதர சில அரசியல் கட்சிகள் போன்றன பேரம் பேசும் நடவடிக்கைகளில் ஈடுபட காத்திருக்கின்றன.

பிரதானமாக மூன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை தவிர்ந்து மேலும் சில வேட்பாளர்கள் சுயேட்சையாக களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் வேட்பாளர்களுக்கும், இடைத்தரகர்களாக செயற்படும் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் சிக்கித்தவிப்பது என்னவோ பொதுமக்களாகவே இருக்கின்றனர். இந்த நிலை காலகாலமாக இடம்பெற்று வரும் ஒரு சாதாரண விடயமாகவே அனைவராலும் பார்க்கப்படுகின்றது.

தேர்தல் காலங்களில் அள்ளி வீசப்படும் வாக்குறுதிகள் தேர்தல் கால சூடு தணிந்த பின்னர் தண்ணீரில் எழுதிய எழுத்துக்களாக மாறி விடும் அந்த அவல நிலையை இன்றளவில் எமது மக்கள் எதிர்கொள்ளாமல் இல்லை.

இன்று நாடளாவிய ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் பாரிய போராட்டங்களை வருடக்கணக்கில் செய்து வருகின்றனர். இறுதி யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களை தேடித் தருமாறு, படையினர் வசப்படுத்தி வைத்திருக்கும் தமது காணிகளை மீட்டுத் தருமாறு, பல வருடங்களாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுவித்துத் தருமாறு கோரி பல போராட்டங்களை வருடங்கள் பல கடந்தும் வடக்கு, கிழக்கு மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

அது ஒருபுறம் இருக்க, தமது அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து தருமாறு, தாம் குடியிருக்க பாதுகாப்பான வீட்டு வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு, அடிப்படை சம்பளத்தினை.. உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற்றுத்தருமாறு கோரி மலையக மக்கள் ஒருபுறம் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டங்கள் அனைத்தும் பல நாட்களாக, பல மாதங்களாக, ஏன் வருடக்கணக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் இதற்கான தீர்வாக கிடைக்கப்பெற்றதுதான் என்ன?

இது மட்டுமா, நாளுக்கு நாள் ஆங்காங்கே போராட்டங்கள், பணிப்புறக்கனிப்புக்கள்.. சட்டத்தரணிகள், வைத்தியர்கள், ஆசிரியர்கள், சுகாதார தொண்டர்கள், புகையிரத சேவை அதிகாரிகள் இப்படி நாளுக்கு நாள் அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டங்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களின் பிரதிநிதிகள் என நாடாளுமன்றம் சென்றவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மக்களுக்கு செய்யும் சேவை என்ன? வாக்குறுதிகள் வழங்குவதை தவிர்த்து...

இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் தாம் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் மக்கள் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சு வார்த்தைகளில் தாம் சார்ந்த மக்களின் நலன் இருக்குமா என்பதுதான் கேள்விக்குறி.. அவ்வாறு இருந்திருந்தால் மக்களின் இந்த அடிப்படை பிரச்சினைகள் கடந்த கால தேர்தல்களின் பின்னர் தீர்த்து வைக்கப்பட்டிருக்கும். 2020ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் வரை மிச்சம் வைக்கப்பட்டிருக்காது..

தற்போது மக்கள் முன்னிலையில் மூன்று வேட்பாளர்கள் பிரதானமாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோத்தபாய ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் களத்தில் இறங்கியுள்ளனர்.

அநுரகுமார திஸாநாயக்கவை தவிர்ந்து, தற்போதைய ஆளும் மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்களான கோத்தபாய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் நாடளாவிய ரீதியில் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு என்ன செய்து விடப்போகின்றார்கள்.

இந்நிலையில், தமிழ் மக்களின் ஏகப் பிரநிதி என்று கூறிக்கொள்ளும், த.தே.கூ கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கியிருந்தது. இன்று அதே கட்சி கோத்தபாய ராஜபக்ச களமிறக்கப்பட்டுள்ளதன் பின்னர் நாங்கள் யார் வெற்றிப்பெற வேண்டும் என ஆதரவளிக்க மாட்டோம். யார் வெற்றிப்பெறக் கூடாது என்பதை மனதில் வைத்து ஆதரவளிப்போம் என அறிவித்துள்ளது.

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட பின்னர் பல தடவைகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டது. ஏன் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னரே அமைச்சர் சஜித் பிரேமதாச கூட்டமைப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

ஆனால், முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோத்தபாய ராஜபக்ச தரப்பினருடன் வெளி உலகிற்கு தெரிந்தவரை பேச்சுவார்த்தைகளையோ அதற்கான முனைப்புக்களையோ கூட்டமைப்பினர் காட்டியதாக தெரியவில்லை. இந்த சமயத்தில் கூட்டமைப்பினர் கோத்தபாயவிற்கு ஆதரவளிக்கமாட்டார்கள் என்பது உறுதி. இதற்கு இறுதி யுத்தத்தின்போது பாதுகாப்பு செயலாளராக களத்தில் நின்று படையினரை கோத்தபாய வழிநடத்தியதும் ஒரு காரணமாக கூறப்படுகின்றது.

ஆனால், கடந்த தேர்தலில் கூட்டமைப்பினர் ஐதேகவை ஆதரித்து தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன? இதுவரையில் படையினர் வசமுள்ள காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டனவா? அரசியல் கைதிகள் முழுமையா விடுவிக்கப்பட்டனரா? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம் தீர்க்கப்பட்டதா..? அல்லது அதற்கான சாதகமான அறிகுறி ஏதும் கிடைக்கப்பெற்றதா.. காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தைத் தவிர.

இவ்வாறான ஒரு சூழலில் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்கின்றனர் கூட்டமைப்பும் அவர்கள் சார்பான தமிழர்களும்..

அடுத்ததாக மலையகத்தில் வாழும் தமிழர்கள்... மலையகம் என்றாலே அடிப்படை சம்பளப் பிரச்சினை.. நிரந்தர வீட்டுப் பிரச்சினை... என பல பிரச்சினைகள். இதற்கும் இதுவரை தீர்வு கிடைத்ததா என்றால் அதுவும் கேள்விக்குறியே.. ஆங்காங்கே ஒவ்வொரு வீட்டுத்திட்டங்கள் தற்போதுதான் முளைத்துவருகின்றன என்றாலும் அதன் பயன்பாடு எந்த அளவிற்கு இருக்கும் என்பது தெரியவில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் பெரும் ஆதரவளித்தவர்கள் மலையக தலைவர்கள், அவர்கள் மாத்திரம் அல்ல அவர்கள் சார்ந்துள்ள மலையக மக்களும்தான். அவ்வாறு பெரும் ஆதரவினை வழங்கி கொண்டு வந்த நல்லாட்சி அரசாங்கம் மலையக மக்களுக்கு செய்தது என்ன?

மலையகத் தலைவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன.. ஏன் இறுதியாக மலையக மக்களின் நாளாந்த சம்பளத்துடன் சேர்த்து தருவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த ஐம்பது ரூபா பணத்தினைக் கூட பெற்றுக்கொடுக்க முடியாத கையறு நிலையில்தான் மலையக தலைவர்கள் இருந்தார்கள்.

இவ்வாறான ஒரு சூழலிலேயே மலையக தலைவர்களும் மலையக மக்களும் அடுத்த ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இந்த தேர்தலாவது வடக்கு, கிழக்கு, மலையகம் என பரந்து வாழும் மக்களுக்கு, அவர்களது கேள்விக்கு விடை தருமா? அவர்களின் வாழ்வுக்கு விடிவை தருமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.