போரை முடிவுக்குகொண்டு வர மகிந்த கொடுத்த அனுமதி! கோத்தபாய ராஜபக்ச வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in அரசியல்

தனக்கு எதிராக எந்த வகையான சூழ்ச்சிகளை செய்து, வழக்குகளைத் தாக்கல் செய்தாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவது உறுதி என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சர்வதேச சக்திகளுக்கு அடிபணியாத தலைமைத்துவம் ஒன்றை நாட்டில் கட்டியெழுப்ப தாம் முன்நின்று நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் விசேட மகா சம்மேளனம் குருநாகல் - சத்தியவாதி மைதானத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த அரசாங்கம் அரசியல் பழிவாங்கலை செய்து, இராணுவத்தினர், மதத் தலைவர்கள் மீது பழிவாங்கலை செய்து பொருளாதாரத்தை சீர்குலைக்கும்போது நாங்கள் மக்கள் என்ற வகையில் குழுவாக இணைந்தோம்.

அரசியல் ரீதியாக மிகப்பெரிய பயணத்தை மகிந்த ராஜபக்சவின் தலைமையில் ஆரம்பித்தோம். அதற்கமைய முன்னிலையில் நாங்கள் உள்ளோம். ஜனநாயக வெற்றியை பெறமுடியாது என்பதை அறிந்துகொண்டு பல்வேறு சூழ்ச்சிகளை எமக்கு எதிராக மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனாலும் நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பதிவுசெய்வோம் என்பதை அறிவிக்க விரும்புகின்றேன். மக்களுடனும், தொழில்துறையினர், வர்த்தகர்கள், முயற்சியாளர்கள் அனைவரையும் நாங்கள் இணைத்து பலம்வாய்ந்த சக்தியாக உருவெடுத்துள்ளோம்.

என்ன வகையிலான பொருளாதார நெருக்கடி இருந்தாலும் அன்று இராணுவச் சிப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால் போரை முடிவுக்கு கொண்டுவர முடியாது என்பதை பாதுகாப்புச் சபை மாநாட்டில் ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறினேன்.

அதற்கான அனுமதியை மகிந்த ராஜபக்ச வழங்கியதற்கமைய மூன்று இலட்சம் படையினரை இணைத்துக் கொண்டதற்கு இணங்கவே போரை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது.

இந்த நிலையில் தற்போது நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டம் மட்டுமல்ல அவற்றை அமுல்படுத்துவதற்கான குழுவும் எம்மிடத்தில் உள்ளன.

ஆகவே இந்த நாட்டை செழிப்புள்ள நாடாகவும், வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியாமல் தகுந்த தலைமைத்துவத்துடன் கூடிய நாட்டைக் கட்டியெழுப்பும் வெற்றிக்கு பங்குதாரர்களாக அமையும்படி கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.