கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய அழுத்தம்! மகிந்த விடுத்துள்ள கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்
170Shares

முன்னாள் பிரதி சொலிசிடர் சுஹத கம்லத் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் பிரதி சொலிசிடர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் ஆகியோர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச இந்த கோரி்கையினை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் விசேட மகா சம்மேளனம் குருநாகல் - சத்தியவாதி மைதானத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“அரசியலமைப்பின் திருத்தம் ஊடாக எம் அனைவர் மீதும் தாக்கினார்கள். அது பிரச்சினையில்லை. ஆனால் நாட்டில் சேவை செய்ய முடியாமற்போனது. பிரதமர் சொல்வதை ஜனாதிபதி கேட்பதாக இல்லை, ஜனாதிபதி சொல்வதை பிரதமர் கேட்கமாட்டார்.

இப்படியொரு நிலையிலேயே நாட்டில் அபிவிருத்தி இருக்கவில்லை. அரசியல் பழிவாங்கல், எதிரிகளை அரசியலில் இருந்து நீக்குவது என்று யோசித்து வழக்குகளையும் தொடுத்தார்கள்.

அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே கோத்தபாய ராஜபக்ச மீது வழக்குகளை தாக்கல் செய்ததாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இரண்டு சொலிசிடர் ஜெனரல் இருவர் தற்போது கூறியிருக்கின்றனர்.

அத்துடன் இந்த வழக்குகளை உண்மையிலேயே தாக்கல் செய்திருக்க வேண்டிய தேவை இருக்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். இப்போது என்ன நடந்துள்ளது?

சுஹத கம்லத் மற்றும் தில்ருக்ஷி ஆகியோர் முன்வைத்த விடயங்கள் பாரதூரமான குற்றச்சாட்டு என்பதால் இதுகுறித்து விசாரணை செய்யாமல் பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

எனினும் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திற்குள் தெரிவுக்குழு மூலமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

அரச அதிகாரிகளை அலரிமாளிகைக்கு அழைத்து பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு என்ற சட்டவிரோதமான பிரிவை அமைத்து அதற்கு தனக்கு தேவையானவர்களை தெரிவுசெய்து அவர்களுக்குத் தலைமைத்துவத்தை வழங்கி செய்த குற்றங்களை, பொய்யான வழக்கினால் நிரபராதி ஒருவர் துன்பம் அனுபவித்தால் மிகவும் அநியாயமானது.

சட்டத்தை மீறி இந்த அரசாங்கம் மட்டுமல்லாமல் எவ்.சி.ஐ.டியை பயன்படுத்தி அதனூடாக அரசியல் எதிரியை நீக்குவதற்கு வேறெந்த அரசாங்கமும் முயற்சித்திருக்கவில்லை” என கூறியுள்ளார்.

இதேவேளை, கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக தொடரப்பட்டு அவர் விடுதலைப் பெற்ற அவன்காட் வழக்கை தாக்கல் செய்த இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவராக தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்கவும், அவன்காட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியும் உரையாடிய தொலைபேசி கலந்துரையாடல் அம்பலப்படுத்தப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த பரபரப்பு தணிந்துவந்த நிலையிலேயே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யும்படி அரசாங்க தரப்பில் இருந்து தனக்கு அழுத்தம் கொடுத்ததாக சாட்சியங்களை பாதுகாக்கும் அதிகார சபையின் தலைவர் முன்னாள் பிரதி சொலிசிடர் ஜெனரல் சுஹத கம்பல் தகவல் அண்மையில் தகவல் வெளியிட்டார்.

இந்த விடயம் கொழும்பு அரசியல் களத்தில் மீண்டும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.