தொடர் நெருக்கடிகளால் ராஜபக்ச தரப்பு குழப்பத்தில்! நாமலின் எதிர்காலம் கேள்விக்குறியா..?

Report Print Rakesh in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலங்கைக் குடிமகனாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட மனு நேற்றுப் புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கின் தீர்ப்புப் பாதகமாக அமைந்தால் தினேஸ் குணவர்த்தனவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என்று அறியமுடிகின்றது.

அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று தினேஸ் குணவர்த்தனவுக்கு மஹிந்த அறிவுறுத்தியுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

கோத்தபாயவுக்கு எதிரான மனு 3 நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் சந்திரகுப்தா தெனுவர மற்றும் காமினி விஜயங்கொட ஆகியோரே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்வதாகக் கூறி இந்த நாட்டுக் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுள்ளார் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறையான குடியுரிமைச் சான்றிதழைச் சமர்ப்பிக்காமல் இந்தக் கடவுச்சீட்டை அவர் பெற்றுள்ளார் என்று தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ள மனுதாரர்கள், அந்தக் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன சட்டத்துக்கு முரணான விதத்தில் வழங்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதனால் கோத்தபாய ராஜபக்சவுக்கு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்குவதைத் தடுக்கும் விதமான உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்க வேண்டும் என்றும், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரையில் அந்தக் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துவதைத் தடுத்து இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்ப்பு எவ்வாறு வரும் என்று தெரியாத நிலையில் மஹிந்த ராஜபக்ச அணியினர் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர் என்று தெரியவருகின்றது.

வழக்கின் தீர்ப்புப் பாதகமாக அமைந்தால் தினேஸ் குணவர்த்தனவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என்று அறியமுடிகின்றது.

சமல் ராஜபக்சவின் மகன் சசீந்ரவுக்கு இராஜ யோகம் ஒன்று உள்ளது என்று நம்பும் மஹிந்த ராஜபக்ச, சமலை ஜனாதிபதி வேட்பாளராகக் கொண்டு வந்தால் நாமலின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று நினைக்கின்றாராம்.

மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி மேடைகளில் பேசக் கூடியவரல்ல. பஸில் ராஜபக்சவும் அமெரிக்கக் குடியுரிமையைக் கொண்டிருந்தவர் என்பதால் மஹிந்த ராஜபக்ச தினேஸ் குணவர்த்தனவைக் களத்தில் இறக்கத் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.

இதற்கிடையில் மைத்திரிபால சிறிசேனவும் வேட்பாளராகக் களமிறக்கும் திட்டத்தைக் கொண்டிருக்கின்றார் என்றும், ஆனால் மஹிந்த ராஜபக்ச தரப்பினர் அவர் வருவதை விரும்பவில்லை என்று தெரியவருகின்றது.

வாசுதேவ நாணயக்கார கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரின் ஆதரவு தினேஸ் குணவர்த்தனவுக்கு உள்ளதால், அவரைக் களமிறக்குவது சிறந்தது என்று மஹிந்த ராஜபக்ச சிந்திக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.