ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் நிறுத்தப்படுவதை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print Malar in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்துவதற்கு மதத் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் மேற்கொள்ளும் முயற்சிக்கு எனது வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

சாள்ஸ் நிர்மலநாதன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அந்த அறிக்கையில்,

மதத் தலைவர்கள் மற்றும் தமிழ் புத்திஜீவிகள் இணைந்து வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் தனித்துவத்தை காக்கவும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்ந்தும் பேரினவாத அரசாங்கங்களினால் புறக்கணிக்கப்பட்டு வருவதை ஆணித்தரமாக சர்வதேசத்துக்கும், சிங்கள தேசத்துக்கும் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளபட்டுள்ளோம்.

இம் முறை நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை களம் இறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மதத் தலைவர்கள் மற்றும் தமிழ் புத்திஜீவிகள் எடுக்கும் முயற்சிக்கு எனது ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தொடர்ந்து இது தொடர்பான மதத் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள், பொது அமைப்புக்களுடனும் கலந்தாலோசித்து இவ் முயற்சிக்கு எனது பங்களிப்புக்களையும் வழங்கத் தயாராக உள்ளதை அவர்களிடம் தெரிவித்துள்ளேன்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் அரசியல் கட்சிகள் பேதமின்றி ஒற்றுமையாக ஒரு நடுநிலையான ஒருவரை தெரிவுசெய்ய வேண்டிய தேவை உள்ளது.

நான் ஒருவரின் பெயரை சிபாரிசு செய்துள்ளேன். அவர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் நீண்டகாலம் பயனித்தவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் தேசியத் தலைவருடன் நீண்டகாலம் பயணித்தவரும் அதனால் சிறைவாசம் அனுபவித்து தற்போது சமூகத்தில் இணைந்து வாழ்பவரும் எமது போராட்டத்தை நன்கு உணர்ந்தவரும் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர் ஆளுமைமிக்க ஒருவரை நான் மதத் தலைவர்களிடம் இனம் காட்டியுள்ளேன்.

இது தொடர்பாக அவர்கள் பரிசீலிப்பதாக என்னிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக உடனடியான முடிவிற்கு நாம் வரவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

சிங்கள தேசத்துக்கும், சர்வதேசத்துக்கும் ஒரு செய்தியை நாம் இதனூடாக சொல்ல வேண்டும். ஆகவே, இம் முயற்சியை கைவிடாமல் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு அனைவரும் ஒற்றுமையாக ஒரு முடிவை எடுப்பதற்கு முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.