ஜனாதிபதி ஆசனத்தில் அமரப்போகும் இளம் தலைவர்! கபீர் ஹாசிம் தெரிவிப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

25 வருடங்களின் பின்னர் நாம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ஒருவரை ஆசனத்தில் அமர்த்துவோம் என்பதை தெரிவிக்கின்றோம் என கபீர் ஹாசிம் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனம் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நாங்கள் 2015ஆம் ஆண்டு போராட்டங்களுக்கு மத்தியில் அரசாங்கத்தை அமைத்தோம். எனினும் எமக்கு போதிய சக்தி இருக்கவில்லை.

எனினும் எமது ஆதரவாளர்களுக்கு முடிந்தளவு சேவையை வழங்கினோம். எமது போட்டியாளர்களால் எமக்கு பல சவால்கள் ஏற்படுத்தப்பட்டன.

அவற்றை வெற்றி கொண்டோம். நியாயமான விடயங்கள் அனைவரையும் சென்றடையாமல் இருந்திருக்கலாம்.

எனினும், அதனை மறந்து அபிமானத்துடனும், கட்சி மீதான பற்றுதலுடனும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைத்து கொள்ளும் நோக்கில் நீங்கள் வந்துள்ளீர்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியை போல் ஜனநாயக ரீதியில் சவால்களை எதிர்கொண்ட கட்சியை உலகில் வேறு எங்கேயும் காணமுடியாது.

நாங்கள் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்கும் கட்சி, விவசாயின் மகனான மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க முடிந்தது. அந்த இயலுமை எமக்கு மாத்திரமே உண்டு.

இன்று இளம் தலைவர் ஒருவரை நாம் அந்த ஆசனத்தில் அமர்த்துவோம். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை கொண்டு வந்த போது அதனை எதிர்த்தவர்கள், இன்று அதனை பாதுகாக்க முன்னிற்கின்றனர்.

இது புதுமையான விடயம். அந்த யாப்பினை பாதுகாக்க வேண்டுமென குறிப்பிடுகின்றார்கள். இந்த சுகததாச உள்ளரங்கில் நிகழ்வு ஒன்றை நடத்தி வேட்பாளரை பெயரிட்டார்கள்.

இது மக்களின் தெரிவு எனவும் குறிப்பிட்டார்கள். ஐயோ கடவுளே இது மக்களின் தெரிவா? அவர்களின் தெரிவு கார்ல்டன் இல்லத்தில் தெரிவு நடக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.