அதற்கு நீங்கள் தயாரா? பல விடயங்களை கோடிட்டுப் பேசிய ரணில்

Report Print Rakesh in அரசியல்
185Shares

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நான் இருக்கும்வரை கட்சி பிளவுபட ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

"ஜனாதிபதித் தேர்தல் வெற்றியுடன் நாடாளுமன்றத் தேர்தலில் பெருபான்மை உறுப்பினர்களுடன் வெற்றிகொள்வதே எமது நோக்கமாகும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று வியாழக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"1981இல் இந்த இடத்தில் இருந்து ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிடப்பட்டார். அப்போது இந்தக் கட்டடம் இங்கு இருக்கவில்லை. பிரேமதாஸ ஜனாதிபதியான பின்னர் இந்தக் கட்டடத்தை நிர்மாணித்தார். தற்போது இந்த இடத்தில்தான் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நாட்டு மக்கள் முன்னிலையில் பெயரிட்டிருக்கின்றோம். ஜே.ஆர் மற்றும் பிரேமதாஸ ஜனாதிபதிகளுடன் நீண்டகாலம் சேவை செய்ய எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. டட்லி சேனாநாயக்கவுடன் சிறிதுகாலமே இணைந்து செயற்படக் கிடைத்தது.

பிரேமதாஸவின் காலத்தில் கஷ்டமான சந்தர்ப்பங்களில் நாங்கள் இணைந்து செயற்பட்டு கட்சியை முன்னுக்குக்கொண்டு சென்றோம். ஒருபோதும் தூரமாகி இருக்கவில்லை. என்றாலும் துரதிஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார். அதன் பின்னர் விஜேதுங்க ஜனாதிபதியுடன் காமினி திஸாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தி நாங்கள் தேர்தலுக்கு முகம்கொடுத்தோம். எனினும், ஏற்பட்ட குண்டுவெடிப்பில் என்னைத்தவிர கட்சியின் பிரதான தலைவர்கள் அனைவரும் இல்லாமல்போனார்கள்.

மேலும் நான் கட்சியின் தலைவரானபோது நான் எதிர்கொண்ட முதலாவது சவால்தான் தலைத்துவத்தை உருவாக்குவது. தலைவர் ஒருவரை நியமிப்பது கடினம் இல்லை. ஆனால், தலைமை தாங்கக்கூடியவர்களை அவசரமாக உருவாக்க முடியாது. காலம் செல்லும். அந்தக் காலப்பகுதியில் இந்தக் கட்சி இல்லாமல்போயிருந்திருக்கலாம். என்றாலும் நாங்கள் கட்சியை முன்னுக்குகொண்டு சென்றோம்.

தற்போது புதிய தலைமைத்துவங்களை உருவாக்கி இருக்கின்றோம். அதுதான் நாங்கள் செய்த பிரதான விடயம் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். அதில் ஒருவர்தான் சஜித் பிரேமதாஸ.

நாட்டின் சனத்தொகையில் அரைவாசி பெண்கள். என்றாலும் ஒரு பெண்கூட அந்தத் தலைமைத்துவத்தில் இல்லாமல் இருப்பது கவலைக்குரிய விடயம். அதனால் அந்தக் குறைபாட்டை இல்லாமலாக்க கட்சியின் இளம் தலைமைகள் அடுத்துவரும் 5 வருடங்களுக்குள் அதனை மேற்காெள்ள வேண்டும்.

மேலும் நாங்கள் பிளவுபட்டு சென்ற போதெல்லாம் எமது கட்சி தோல்வியடைந்தது. 1955இல் பிளவுபட்டோம்; 1956இல் தோல்வியடைந்தோம்.1969இல் நாஙகள் பிளவுபட்டோம் ;1970இல் தோல்வியடைந்தோம். அதேபோன்று 1991இல் பிளவுபட்டோம்; 1994இல் நாங்கள் தோல்வியுற்றோம். அதனால் நாங்கள் பிளவுபட்டால் தோல்வியடைவோம். யாருடைய பேச்சையும் கேட்டு பிளவுபடவேண்டாம். நான் கட்சித் தலைவராக இருக்கும்வரை பிளவுபட இடமளிக்கமாட்டேன்.

அத்துடன் 17வருடங்கள் நாங்கள் ஆட்சி செய்திருக்கின்றோம். அதனையும்விட அதிக காலம் எதிர்க்கட்சியில் இருந்திருக்கின்றோம். தற்போது எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றி பிரதமர் பதவியைப் பெற்றிருக்கின்றோம். எமது அரசை இல்லாமாலாக்குமாறு தெரிவித்தும் நாங்கள் தவண்டேனும் ஜனாதிபதி தேர்தல்வரை தற்போது வந்திருக்கன்றோம். அதனால் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் கைவிடவேண்டாம். அதற்கு நீங்கள் தயாரா?

இந்தப் பெரும்பான்மையற்ற அரசில் ஒவ்வொரு பந்து ஓவருக்கும் குறைந்த பட்சம் 6 ஓட்டங்களையாவது விளாசி இருக்கின்றோம். பாதைகளை அமைத்திருக்கின்றோம். சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தை மேற்கொண்டு செல்கின்றோம். 13 வயது வரை கட்டாயக்கல்வியை அனைத்துப் பிள்ளைகளுக்கும் வழங்குவோம். கடந்த அரசு இதனை இல்லாமலாக்கியது.

பெற்றோல் விலை கடந்த காலத்தைவிட குறைந்துள்ளது. சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. என்றாலும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தை பாதாளத்துக்குள் கொண்டு சென்றவர்களுக்கு மீண்டும் அரசு ஒன்றை வழங்கு முடியுமா? இன்று உங்கள் வீட்டுக்கு வெள்ளை வான் வருகின்றதா? அம்புலன்ஸ் வருகின்றதா? நல்லதொரு ஆட்சியை நாங்கள் ஏற்படுத்தி இருக்கின்றோம்.

கடந்த நான்கு வருடங்கள் நாங்கள் பாரியளவில் கஷ்டப்பட்டோம். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தோல்வியுற்றோம். எனினும், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியுள்ளோம். அதன்காரணமாக சிறந்த அடித்தளத்தைப் போட்டிருக்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையத்தை நாங்கள் திறந்துவைக்க இருக்கின்றோம். ஒரு ரூபா கூட கடன்படவில்லை. இவ்வாறு அரசின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் புத்தகம் அடிக்க இருக்கின்றோம்.

மேலும், நாங்கள் அரசை அமைத்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி இருக்கின்றோம். அதனால் இன்று யாரும் சிறைக்குச் செல்வதில்லை. தொலைக்காட்சியில் எமக்கே ஏசுகின்றனர். தற்போது எதிர்க்கட்சியில் எம்முடன் போட்டியிட வந்திருப்பவர் நகைப்புக்குரிய ஒருவராவார். அதனால் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றது.

அதனால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று அடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் பெற்றிபெறுவதே எமது நோக்கம். அதற்காக நாங்கள் கடுமையாக உழைக்கவேண்டும். ஜனாதிபதியும் அமைச்சரவையும் நாங்கள் அமைப்பதற்கு125 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகொள்ள உறுதிகொள்ளவேண்டும்" என்றார்.