ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 21 வேட்பாளர்கள் கட்டுப்பணம்

Report Print Rakesh in அரசியல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று 21 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஜனாதிபதி சட்டதரணி என்.ஜே. அபேசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 6ம் திகதி வரை கட்டுப்பணத்தைச் செலுத்த முடியும் எனவும் ஆணைக்குழுவின் உறுப்பினர் அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவோர் வேட்புமனுக்களை எதிர்வரும் 7ம் திகதி காலை 9 மணி முதல் 11 மணிவரை தாக்கல் செய்யமுடியும். வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர் தொடர்பாக ஆட்சேபனை எதுவும் இருப்பின் காலை 8 மணி முதல் 11.30 மணி வரை தெரிவிக்கலாம்.

தேர்தல் திணைக்களத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட வேட்பாளர் குறித்து அன்றைய தினம் அறிவிக்கப்படும்.

இதேவேளை தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பத் திகதி நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.