கோத்தபாயவின் குடியுரிமை மனு:நாளை காலை மீள விசாரணை

Report Print Rakesh in அரசியல்

கோத்தபாய ராஜபக்சவை இலங்கைக் குடிமகனாக அங்கீகரிப்பதை தடுத்து உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நாளை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு தலைமை நீதிபதி யசன்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த மனு தொடர்பான விசாரணைகள் இன்று பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6.15 மணி வரையில் இடம்பெற்றது.

அரசமைப்பின் 30ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை ஒட்டுமொத்தமாகப் படிக்க வேண்டும் என்று பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன சார்பில் ஆஜரான சட்டத்தரணி சனக டி சில்வா தெரிவித்தார்.

அரசமைப்பின் 42ஆவது பிரிவின்படி தனது கடமைகளின்போது நாடாளுமன்றத்துக்கு ஜனாதிபதி பொறுப்பு என்று ஜனாதிபதி சட்டத்தரணி சனக டி சில்வா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரங்கள் அமைச்சரவை மூலம் பயன்படுத்தப்படுகின்றன என்று அரசமைப்பின் 43ஆவது பிரிவு கூறுகின்றது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதிக்கு வரம்பற்ற அதிகாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் கூறியிருந்தாலும், உயர்நீதிமன்றத்தின் ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழு, ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இல்லை எனக் குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, நிர்வாகத்தின் தலைவர் ஜனாதிபதியாக இருப்பதாகவும், அமைச்சர்களை நியமிக்கவும், அமைச்சுகளில் பணியாற்றவும் அதிகாரம் இருப்பதாகவும் கூறினார்.

19 ஆவது திருத்தத்திற்கு முன்னர் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும், அவரது நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியாது என்றும் கூறினார்.

ரிட் மனுவை தவறான குற்றச்சாட்டில் பதிவு செய்துள்ளதால் அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார்.

கோத்தபாய ராஜபக்சவுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டபோது, அவர் உட்பட 21 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இந்த மனுவை பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோர் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் நாளை வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.