பலாலி விமான நிலைய அபிவிருத்தியின் பின்னால் உள்ள அரசியல்! ஏமாற்றப்படுகிறார்களா தமிழர்கள்?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக திறந்து வைத்து அதனூடாக வடக்கு மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் முயற்சி செய்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது.

பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக இந்திய அரசின் நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகின்றது, இந்த விமான நிலைய அபிவிருத்தி பணிகள் இம்மாதம் 10 ஆம் திகதி அளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சு இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் எதிர்வரும் 17ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரான செஹான் சேனசிங்க, தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறவே அவசர அவசரமாக பலாலி விமான நிலைய நிலையத்தை திறப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.

எமக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக திறந்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனூடாக தேர்தல்கள் சட்டங்கள் மீறப்படுவது அப்பட்டமாக தெரிகிறது. யாரை இந்த அரசாங்கம் ஏமாற்றுகிறது.

வடக்கிலுள்ள தமிழ் மக்கள் 2015ஆம் ஆண்டு ஏமாற்றப்பட்டதைப் பார்க்கிலும் இருமடங்கில் அவர்களை மீண்டும் ஏமாற்றுவதற்கு முயற்சிக்கப்படுகிறது. திறக்கப்படவுள்ள விமான நிலையம் முழுமைப்படுத்தப்பட்டுள்ளதா? சர்வதேச பாதுகாப்புக் கட்டமைப்பிலிருந்து அனுமதி கிடைத்திருக்கிறதா? யாரை ஏமாற்றப்பார்க்கின்றார்கள்? தேர்தல் நெருங்கிவரும் நிலையில் வடக்கு மக்களுக்கு இவ்வளவு செய்திருக்கின்றோம் என்பதை காண்பிக்கவா இது செய்யப்படுகிறது.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேனசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.

வடக்கிலுள்ள அரசியல்வாதிகளை இந்த அரசாங்கம் பாதுகாத்து வருகின்ற போதிலும் வடக்கு மக்களை அரசாங்கம் கவனிப்பதே இல்லை. வடக்கு மக்களின் வாக்குகளை பெறுவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆகவே சஜித் பிரேமதாஸவுடன் சுமந்திரன், சம்பந்தன் ஆகியோர் செய்துகொண்ட ஒப்பந்தம் என்ன? நிபந்தனைகள் என்ன? நிபந்தனைகளை சஜித் பிரேமதாஸ அறிவாரா? அதுகுறித்து நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

தங்களது மக்களுக்கு ஒன்றையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபுறம் கூறினாலும் இன்னுமொரு புறத்தில் அரசாங்கத்தின் வேட்பாளருக்கு ஆதரவளிக்கத் தயார் என்று கூறுகின்றார்கள். அதனால் இந்த ஒப்பந்தம், நிபந்தனைகள் என்ன என்பதை அம்பலப்படுத்த வேண்டும் என்றார்.