கோத்தபாயவுக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படுமா?

Report Print Vethu Vethu in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் வழக்கு விசாரணைக்கான தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், 2005ஆம் ஆண்டு அமெரிக்கர் என்ற ரீதியில் சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வந்த கோத்தபாய ராஜபக்ச சட்டவிரோதமாக வாக்களித்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் தேர்தல் மத்திய நிலையத்தில், கடமையில் இருந்த அனைவரையும் அழைத்து விசாரணை மேற்கொள்வதற்கு குற்ற விசாரணை திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய 2005ஆம் ஆண்டு மெதமுலன வீட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், வாக்களித்த தேர்தல் நிலையங்களில் கடமையாற்றிய அதிகாரிகள், கிராம சேவகர், உட்பட பலரிடம் விசாரணை மேற்கொள்ள குற்ற விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடிமகனாக இருந்த போது, 2005ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் அவரது பெயரும் அவருடைய மனைவியின் பெயரும் சட்டவிரோதமாக உள்ளடக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய சட்டவிரோதமாக கோத்தபாய தனது வாக்கினை பயன்படுத்திருப்பது உறுதியாகினால், அவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.