இலங்கை வரலாற்றில் முதன் முறையாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடு! கோத்தபாயவின் நிலை என்ன?

Report Print Sujitha Sri in அரசியல்

பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் மாத்திரமின்றி மாற்று கருத்துடைய ஜனாதிபதி வேட்பாளர்களையும் ஒரே மேடைக்கு கொண்டு வருமாறு மக்களிடமிருந்து கோரிக்கை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மார்ச் 12 இயக்கத்தின் அமைப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளைய தினம் ஒரே மேடையில் தோன்றவுள்ளனர்.

இதற்கான நிகழ்வினை சுகததாச உள்ளக அரங்கில் நடத்த மார்ச் 12 இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்களிடம் ஐந்து முக்கிய விடயங்களுக்கான தீர்வுகள் குறித்து விளக்கங்கள் கோரப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரோஹண ஹெட்டியாராச்சி மேற்படி விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 29 பேர் இதுவரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். எனினும் இவர்கள் அனைவரையும் குறித்த மேடைக்கு நாம் கொண்டு வரவில்லை.

அதில் 11 பேரே நாளைய தினம் இடம்பெறும் நிகழ்விற்கு வருகின்றனர். சில நிபந்தனைகளின் அடிப்படையில் நாம் குறித்த 11 பேரை தெரிவு செய்துள்ளோம்.

பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பவற்றின் ஜனாதிபதி வேட்பாளர்களை கொண்டு வர தீர்மானித்திருந்தோம்.

ஆனால் மாற்று கருத்துடைய ஜனாதிபதி வேட்பாளர்களையும் அதாவது பிரதான கட்சிகள் தவிர்ந்த ஏனைய வேட்பாளர்களையும் மேடைக்கு கொண்டு வருமாறு மக்களிடமிருந்து கோரிக்கை வந்துள்ளது.

எனவே நாம் 11 பேரை நாளைய தினம் மேடைக்கு கொண்டு வருகின்றோம். அதேவேளை ஜனாதிபதி வேட்பாளர்களான அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாஸ நாளைய தினம் நிகழ்விற்கு வருவது உறுதியாகியுள்ளது.

என்ற போதும் கோத்தபாய ராஜபக்ச வருகை தொடர்பான உறுதியான அறிவிப்பு எதுவும் எமக்கு கிடைக்கவில்லை.

அவரை இலங்கை பிரஜையாக அங்கீகரிப்பதற்கு எதிரான வழக்கின் விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்று வருவதாலேயே இந்த நிலை காணப்படுகிறது என சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடைக்கு சமூகமளித்து மக்களை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.