மாற்று வேட்பாளரை இறக்கும் கட்டாயத்தில் மொட்டுக் கட்சி

Report Print Rakesh in அரசியல்
890Shares

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமை தொடர்பான சர்ச்சையின் மீது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு தொடர்பான கட்டளை இன்று வெளியாகவுள்ள நிலையில், அந்தக் கட்டளை எப்படி அமைந்தாலும், மாற்று வேட்பாளர் ஒருவரைக் கட்டாயம் களம் இறக்க வேண்டிய நெருக்கடியில் அக்கட்சி இருப்பதாகக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் வேட்பாளராக அல்லது சுயேச்சை வேட்பாளராக ஒருவரைக் களம் இறக்கும் கட்டாயத்தில் உள்ள பொதுஜன முன்னணி பெரும்பாலும் சமல் ராஜபக்சவை மாற்று வேட்பாளராக நிறுத்தும் முன்னாயத்தத்தில் இருப்பதாகத் தெரிகின்றது.

கோத்தபாயவின் குடியுரிமை சர்ச்சை தொடர்பில் அவரைப் பாதிக்கும் விதத்தில் இடைக்கால உத்தரவு எதனையும் வெளியிட மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று மறுத்து விட்டால், திங்களன்று கட்சியின் வேட்பாளராக கோத்தபாய தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வார்.

எனினும், அத்தகைய மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மனுதாரர் பின்னர் உயர்நீதிமன்றுக்குச் சென்று மேன்முறையீடு செய்யவும் - அத்தகைய மேன்முறையீட்டின் மீது கோத்தபாயவின் இலங்கைக் குடியுரிமைச் சான்றிதழுக்கு எதிராக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கவும் வாய்ப்புகள் - சாத்தியங்கள் இருக்கின்றன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. அத்தகைய வலிதான காரணங்கள் இந்த வழக்கில் தாராளமாக இருக்கின்றன எனவும் சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேட்புமனுத் தாக்கலுக்கும் வாக்களிப்புக்கும் இடையில் உயர்நீதிமன்றம் அவ்வாறான இடைக்காலத் தடையுத்தரவு எதனையாவது விதிக்குமானால், இந்தத் தேர்தலில் பொதுஜன முன்னணி சார்பான வேட்பாளர் இல்லாமல் போகும் ஆபத்து ஏற்படும் எனவும் கூறப்படுகின்றது.

இத்தகைய நெருக்கடி ஏற்பட்டால் அதனைச் சமாளிப்பதற்காகக் கோத்தபாயவுக்கு மாற்றாக - மேலதிகமாக ஒருவரை சுயேச்சையாகக் களம் இறக்கிக் கைகாவலுக்கு வைத்துக் கொள்வது, தப்பித் தவறி கோத்தபாயவுக்கு எதிராக வாக்களிப்புக்கு முன்னர் உயர்நீதிமன்றில் இடைக்காலத் தடையுத்தரவு ஏதும் வந்து, அவர் தேர்தலில் இருந்து விலக்கப்பட்டால், அந்த இடத்துக்கு சுயேச்சையாக நிற்கும் மாற்று வேட்பாளரைத் தங்கள் வேட்பாளராக அறிவித்து தேர்தல் போட்டியில் தொடர்வது என பொதுஜன முன்னணி யோசிப்பதாகவும் கூறப்பட்டது.

அவ்வாறு இல்லாமல் கோத்தபாய போட்டியிடுவதற்கு எதிராக இன்றே மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு வழங்கிவிட்டால், கோத்தபாயவை நிறுத்தி விட்டு மாற்று வேட்பாளரை உடன் களமிறக்குவது என்றும் பொதுஜன முன்னணி தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்த இரண்டு சாத்தியங்களின் அடிப்படையில் மாற்று வேட்பாளராகப் பெரும்பாலும் சமல் ராஜபக்ச இருப்பார். அவரைப் பொதுஜன முன்னணி தயாராக வைத்திருக்கின்றது.