ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்தினர் வெற்றி பெறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை

Report Print Kumar in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்தினை சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் க.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - நல்லையா வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

சிறுபான்மை சமூகத்தினை பொறுத்தவரையில் ஒரு வேட்பாளரை நிறுத்துவது என்பது உகந்தவிடயம் அல்ல. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய விடயங்கள் எழுத்துமூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் இணக்கப்பாடு ஏற்படும் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம். எது எவ்வாறாக இருந்தாலும் வடக்கு, கிழக்கை பொறுத்த வரையில் குறிப்பாக தமிழ் பேசும் மக்களை பொருத்த வரையில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏதோவொரு விதத்தில் விரும்பியோ விரும்பாமலே ஈடுபட்டே ஆக வேண்டும்.

எமது கட்சியைப் பொருத்தவரையில் நாங்கள் எல்லாத் தேர்தல்களிலும் வலியுறுத்துகின்ற எமது இனப்பிரச்சினை தொடர்பான தீர்வு என்கின்ற விடயம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது கோரிக்கையாக இருக்கும்.

எமது மாவட்டக் கிளைகளை கூட்டி அந்த அந்த மாவட்டங்களில் எமது கட்சியினர் கொண்டிருக்கின்ற அபிப்பிராயங்கள் தொடர்பில் கருத்துக்களை சேகரிக்க இருக்கின்றோம். அதனைத் தொடர்ந்து எமது மத்தியகுழு கூடி இது தொடர்பில் நாங்கள் இறுதி முடிவு எடுப்போம்.

அதற்கு முன்பதாக முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகள் எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பில் கூடுதல் அக்கறை கொள்வோம்.

தற்போது உத்தியோகபூர்வமற்றதாக இடம்பெறும் சந்திப்புக்களில் எமது நிலைப்பாடுகளை தெரிவித்து அதனை தேர்தல் விஞ்ஞாபனங்களில் உட்படுத்த முடியுமா என்பது தொடர்பிலும் ஆலோசனைகளும் வழங்கியிருக்கின்றோம்.

நாங்கள் கூறிய விடயங்கள் எவ்வாறாக தேர்தல் விஞ்ஞாபனங்களில் வரும் என்பது தொடர்பில் நாங்கள் அவதானிப்போம்.

மேலதிகமான பேச்சுவார்த்தைகள் தேவைப்படுமிடத்து அவர்கள் அழைக்கும் பட்சத்தில் அவர்களுடன் கதைத்து எமது தெளிவூட்டல்களை வெளிப்படுத்திய பின்னர் எமது மத்திய குழுவில் இறுதி முடிவினை எடுப்போம்.

இந்த அடிப்படையிலே தான் எமது கட்சி இந்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.