கோத்தபாயவை வீழ்த்த நினைத்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை! இன்றிலிருந்து தோல்வி ஆரம்பம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

மீண்டும் நீதிமன்ற வாயிலாக ராஜபக்ச தரப்பை தோற்கடித்து பாடம் புகட்ட நினைத்த தரப்பிற்கு ஏமாற்றம் கொடுக்கும் வகையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அமைந்திருப்பதாக பொதுஜன பெரமுன கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கோத்தாபய ராஜபக்ஷவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,

கோத்தாபய ராஜபக்ஷவை அரசியலில் இருந்து நீக்குவதற்கு நீதித்துறையை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் இன்று தோல்வியடைச் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் சுயாதீனமாகச் செயற்பட்டமைக்கு தலை வணங்குகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இத் தீர்ப்பு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஜெப்ரி கருத்துரைக்கையில், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிரான இந்த வழக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிப்பதற்கு கூட பொறுத்தமற்றது என்ற வகையில் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

இன்றைய தீர்ப்பின் மூலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி கோத்தபாய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றி பெறுவார் என்று உறுதியாகியுள்ளது என்று உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

மிகவும் சாதாரணமான முறையில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பிற்கு நன்றி தெரிவிக்கின்றோம் என்றார் கெஹெலிய ரம்புக்வெல்ல.

முழு நாடும் எதிர்பார்த்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதுவே இறுதி தீர்ப்பு என்று டலஸ் அழகப் பெருமவும், நவம்பர் 16 ஆம் திகதிக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்தாயிற்று என்று மஹிந்தானந்த அலுத்கமகேவும் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை, நீதித்துறையின் சுயாதீனமான செயற்பாடுகள் மூலம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டமைக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என்று நிமல் சிறிபால டி சில்வாவும், இனி யாரும் கோத்தபாய ராஜபக்ஷவின் குடியுரிமை குறித்து கேள்வியெழுப்ப முடியாது. அவருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்த இருவராலும் நன்மையே கிடைத்துள்ளது என்றார் சட்டத்தரணி மனோஜ் கமகே.

இத் தீர்ப்புத் தொடர்பில் பேசிய விமல் வீரவன்ச, கோத்தபாய ராஜபக்ஷவுடன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதவர்கள் நீதித்துறையை பயன்படுத்தி அவரை வீழ்த்த நினைத்தார்கள். அவ்வாறானவர்களின் தோல்வி இன்றிலிருந்து ஆரம்பமாகியுள்ளது என்றார்.