இறுதி முடிவெடுக்க மைத்திரியை நாளை சந்திக்கின்றார் பசில்!

Report Print Rakesh in அரசியல்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் நாளை முக்கியத்துவமிக்க சந்திப்பு நடைபெறவுள்ளது.

புதிய அரசியல் கூட்டணி, ஜனாதிபதித் தேர்தலுக்கான சின்னம் உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் நோக்கிலேயே குறித்த சந்திப்பு நடைபெறுகின்றது என சுதந்திரக் கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிந்தது. .

“தாமரை மொட்டு” சின்னத்தைக் கைவிட்டுவிட்டு, பொதுச் சின்னத்தின்கீழ் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள முன்வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ராஜபக்சக்கள் அண்மையில் நிராகரித்துவிட்டனர்.

இந்தநிலையில் சின்னம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு இம்மாதம் 5ம் திகதி (நாளை) வரை சுதந்திரக் கட்சி அவகாசம் வழங்கியது.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பசில் ராஜபக்சவுக்கும் கடிதம் அனுப்பியிருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இரு கட்சிகளினதும் உயர்மட்டத் தலைவர்கள் நாளை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை சனிக்கிழமை இரவு ஜனாதிபதி மைத்திரி தலைமையில் கூடவுள்ளது. அதற்கு முன்னரே பஸிலுடன் மைத்திரி பேச்சு நடத்துகின்றார்.

இதன்போது எடுக்கப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே ஜனாதிபதித் தேர்தல் குறித்து சுதந்திரக் கட்சி இறுதி முடிவெடுக்கவுள்ளது.

Latest Offers

loading...