கருணாவோடு கூட்டு சேர்ந்தாரா வியாழேந்திரன்? மகிந்தவின் அலுவலகத்தில் நடந்தது என்ன?

Report Print Murali Murali in அரசியல்

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுடைய கட்சியில் இணைந்துகொண்டதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் உள்ளிட்டவர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் சந்தித்து பேசியிருந்தனர்.

அது குறித்த புகைப்படங்களும் வெளியாகியிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் விநாயகமூர்த்தி முரளிதரனுடைய கட்சியில் இணைந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது குறித்து எமது செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் கட்சிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுகப்பட்டிருந்தது. அந்த வகையில் 10க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தார்கள்.

நானும் அதன் அடிப்படையிலேயே கலந்துகொண்டிருந்தேன். அங்கு எந்த கட்சியும், எந்த கட்சியுடன் இணைந்து கூட்டு அமைப்பது தொடர்பில் பேசவில்லை. கூட்டத்திற்கு வந்தவர்கள் தமிழ் மக்கள் சார்ந்த பிரச்சினைகளை பேசியிருந்தனர்.

நானும் சில விடயங்கள் குறித்து பேசியிருந்தேன். மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவது தொடர்பிலேயே பேசியிருந்தோம். எனினும், நான் கருணாவின் கட்சியில் இணைந்துகொண்டதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். கருணாவின் கட்சியிலோ, அவர் சார்ந்த கொள்கையுடனோ நான் இணைந்து போகவில்லை. அதனை ஏற்றுக்கொள்ளவும் இல்லை.” என அவர் மேலும் கூறியுள்ளார்.