முழு நாடும் விடுவிக்கப்பட்டுள்ளது! நீதிமன்ற தீர்ப்பு குறித்து மகிந்த வெளியிட்ட மகிழ்ச்சி

Report Print Murali Murali in அரசியல்

மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு கோத்தபாய ராஜபக்சவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தையும் விடுவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் இலங்கை குடியுரிமையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இது குறித்து கருத்து வெளியிட்டிருந்த மகிந்த ராஜபக்ச,

“முழு நாடும் விடுவிக்கப்பட்டதாக நான் நினைக்கிறேன். கோத்தபாய ராஜபக்ச மட்டுமல்லாமல், முழு நாடும் விடுவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று நான் நம்புகிறேன்.

இந்நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நீதித்துறை மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கை ஆகியவை இன்று தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச சார்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. இது குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது,

“நீதிமன்றம் என்ன தீர்மானிக்கும் என்பதில் உறுதியாக இருக்க முடியாத நிலையில், காப்புப் திட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எவ்வாறாயினும், நீதிமன்றத்தின் முடிவு எப்படியானதாக இருந்தாலும் நாங்கள் மக்களை கைவிட மாட்டோம்,” என அவர் மேலும் கூறியுள்ளார்.