நீதிமன்ற தீர்ப்பை அடுத்த கோத்தபாய ராஜபக்ச எடுக்கும் நடவடிக்கை!

Report Print Murali Murali in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் திங்கட்கிழமை தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் 07ம் திகதி திங்கட்கிழமை முதல் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு திகதி குறித்திருந்தது.

இதற்கமைய வேட்பு மனு தாக்கல் செய்கின்ற முதலாவது நபராக கோத்தபாய ராஜபக்ச திங்கட்கிழமை காலை சென்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதுடன், அடுத்த நாள் முதல் பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, அர்ஜூன ஒபேசேகர, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், குறித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், அவர், வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.