நீதிமன்றத்திற்குள் ஏற்பட்ட அதிர்ச்சி! கோத்தபாய தரப்பினரை கடுமையாக எச்சரித்த நீதிபதிகள்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

கோத்தபாய ராஜபக்சவிற்கு சாதகமாக தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது தீர்ப்பு வாசித்து முடிவதற்குள் நீதிமன்றத்திற்குள் இருந்தவர்கள் கை தைட்டி ஆரவாரம் செய்தமையினால் மன்றிற்குள் இருந்த பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் அங்கிருந்தவர்களை நீதிபதிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி,

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்ரகுப்த தேநுவர, காமினி வியாங்கொட ஆகியோர் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, அர்ஜூன ஒபேசேகர, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் பின்னர் மனுவை தள்ளுபடி செய்வதாக மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி யசந்த கோதாகொட இன்று மாலை தீர்ப்பறிவித்தார்.

இதன்போது, கோத்தபாயவின் ஆதரவாளர்கள், ஆதரவு சட்டத்தரனிகள் பலர் கரகோஷம் செய்தும், மகிழ்ச்சியில் சப்தமிட்டதும் நீதிமன்றத்துக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்ற நடவடிக்கை நிறைவுபெறாத நிலையில், தீர்ப்பின் இடை நடுவே இவ்வாறு கரகோசஷம் எழுந்தமையினால் மன்றில் இருந்த பலர் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து கோத்தபாய ராஜபக்ஷவின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா உடனடியாகவே பின்னோக்கி திரும்பி அமைதி கொள்ளுமாறு கூறியதுடன், இந்த செயற்பாடுகள் தொடர்பில் தனது ஆழ்ந்த கவலையை நீதிபதிகளிடம் வெளியிட்டார்.

எனினும் தலைமை நீதிபதி யசந்த கோதாகொட, இந்த நடவடிக்கையை மிக மோசமான, நீதிமன்றை அவமதிக்கும் செயல் என வர்ணித்ததுடன், இந்த செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்த அல்லது அச் செயற்பாடுகளில் ஈடுபட்ட சட்டத்தரணிகளை சட்டம் பார்த்துக்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்தார்.

இதேவேளை, நீதிமன்ற வளாகத்திலும் கோத்தபாயவுக்கான ஆதரவு கோஷங்கள் எழுப்பட்ட நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு முன்பாக பல்லாயிரக்கணக்கான பட்டாசுகள் கொளுத்தப்பட்டும் மகிழ்ச்சி பரிமாறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers