கோத்தாவுக்கு உத்தரவாதம் அளிக்கும் மகிந்தானந்த

Report Print Jeslin Jeslin in அரசியல்

எம்முடைய ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, தான் வழங்குகின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய ஒருவர். அதற்கான உத்தரவாதத்தை நான் வழங்குகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்படாவிட்டால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என்று கூறியவர்கள் இன்று சஜித் பிரேமதாசவுடன் கைகோர்த்துக்கொண்டு நிற்கின்றார்கள்.

ஆனால் எம்முடைய ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, தான் வழங்குகின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய ஒருவராவார்.

இம்முறை மலையக மக்களின் நலன் சார்ந்து அமுல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் கோத்தபாய ராஜபக்சவிடம் இருக்கின்றது.

அவர் அத்திட்டங்களை நிச்சயமாக நடைமுறைப்படுத்துவார் என்பதற்கான உத்தரவாதத்தை நான் வழங்குகின்றேன்.

இன்றளவில் மலையக பெருந்தோட்ட மக்களின் உண்மையான பிரச்சினைகள் என்னவென்பது எமக்குத் தெரியும். குறிப்பாக மலையக மக்களுக்கான வீடமைப்புத்திட்டம் என்பது முறையாக நடைமுறைப்படுத்தப்படாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகளும் கோழிக்கூடு போன்றே இருக்கின்றன. அத்தோடு அந்த இல்லங்களுக்கான நீர், மின்சாரம், சீரான வீதி உள்ளிட்ட எந்தவொரு உட்கட்டமைப்பு வசதிகளும் முறையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

அதேபோன்று மலையக சமுதாயத்திற்கு இன்னமும் முறையான கல்வி வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. பெருந்தோட்ட இளைஞர், யுவதிகள் பலரும் க.பொ.த சாதாரணதரம் வரை படித்துவிட்டு கொழும்பில் வந்து தொழில்புரிகின்றனர். அவர்களுக்கான சீரான வேலைவாய்ப்பென்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

மேலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வுகோரி போராட்டங்கள் இடம்பெற்றன. ஆனால் அவர்களுடைய கோரிக்கைகள் இதுவரையிலும் பூர்த்தி செய்யப்படவில்லை. சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்படாவிட்டால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என்று கூறியவர்கள் இன்று சஜித் பிரேமதாசவுடன் கைகோர்த்துக்கொண்டு நிற்கின்றார்கள்.

ஆனால் எம்முடைய ஜனாதிபதி வேட்பாளர், தான் கூறுகின்றவற்றைச் செய்யக்கூடியவர் என குறிப்பிட்டுள்ளார்.