கோத்தபாயவின் வெற்றியை உறுதி செய்தாரா மைத்திரி? கூட்டணியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Report Print Vethu Vethu in அரசியல்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகள் இணைந்த கூட்டணியின் பொது வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மைத்திரி தலைமையிலான கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான சாதகமான நிலைப்பாடு அடங்கிய கடிதம் ஒன்றை பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ அனுப்பி வைத்துள்ளார்.

இரு கட்சிகளும் இணைந்து கதிரை சின்னத்தில் களமிறங்கலாமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் கீழ் போட்டியிடுவதற்காக கோத்தபாய கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் மாற்று சின்னத்தின் கீழ் போட்டியிடுவதில் சட்டச் சிக்கல்கள் ஏற்படலாம். அவ்வாறான எந்தவொரு நெருக்கடியும் இல்லாத பட்சத்தில் கோத்தபாய கதிரை சின்னத்தில் போட்டியிட இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இரு கட்சிகளுக்கும் இடையில் பல்வேறு மட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் இழுபறி நிலை காணப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் சாதனமான நிலைப்பாடு எட்டப்பட்டுள்ளது.

புதிய கூட்டணி தொடர்பான இறுதி நிலைபாடு தொடர்பில் ஆராயும் நோக்கில் பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நாளையதினம் விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவுடன் களமிறங்கும் வேட்பாளர்களே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளமையினால் கோத்தபாயவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக என அரசியல் விமர்சர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Latest Offers

loading...