தமிழர்களைக் கொல்லவில்லை, போரையே முடித்து வைத்தோம் - கோத்தபாய ராஜபக்ச

Report Print Rakesh in அரசியல்

“போரை நடத்தி, தமிழ் மக்களை நாங்கள்தான் கொன்றொழித்தோம் என்ற தோற்றப்பாடொன்று இன்றளவில் தமிழர்கள் மத்தியிலே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. உண்மையில் நாங்கள் போரை உருவாக்கவில்லை.

அது உருவாகுவதற்கு காரணமாகவும் இருக்கவில்லை. நாங்கள் செய்ததெல்லாம் நீண்டகாலப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தமை மாத்திரமே.” என பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மலையக இளைஞர் அணியினால் இன்று சனிக்கிழமை பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எட்ஜில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலையக இளைஞர் கருத்தரங்கில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றதாக எம்மீது பழி சுமத்தி, மக்கள் மத்தியில் தவறான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்கு போரைத் தோற்றுவித்தவர்கள் முயற்சிக்கின்றார்கள்.

எனவே, அத்தகைய தவறான புரிதலை முறியடித்து, நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டுக்கு நல்லதையே செய்தோம் என்பதை மலையகம்

உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு மலையக இளைஞர் அணி எடுத்துக்கூற வேண்டும் என்றும் கூறினார்.

ஒவ்வொரு முறையும் தேர்தல் நெருங்கும்போது உங்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்வதாக அரசியல்வாதிகளால் வாக்குறுதிகள் வழங்கப்படுவதும், பின்னர் அவை மறக்கடிக்கப்படுவதும் வழமையாக நடைபெறும் விடயமாகும்.

எனவே, அத்தகைய வாக்குறுதிகளை விடுத்து மலையக இளைஞர், யுவதிகளாகிய உங்களுடைய எதிர்காலத்தை எவ்வாறு உங்களுடைய கைகளுக்குள் கொண்டுவருவது என்பது குறித்துப் பேச விரும்புகின்றேன்.

மலையக மக்களுக்கான கல்வித்தேவை இதுவரையில் முறையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. அதேபோன்று கடந்த 100 வருடங்களுக்கு முன்பு காணப்பட்ட வீடுகளே இன்னமும் உள்ளன. எனவே, மலையகத்தின் அபிவிருத்தி தொடர்பில் குறுகிய மற்றும் நீண்டகால அடிப்படையில் சிந்திக்க வேண்டும்.

அதேபோன்று பெருந்தோட்டத்துறை மற்றும் தேயிலை உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தல் குறித்து மாத்திரம் திட்டங்களை வகுக்காமல், அங்கு வாழும் மனிதர்களை மையப்படுத்தி, அவர்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை உருவாக்க வேண்டும்" - என்றார்.

Latest Offers

loading...