ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு? முக்கியஸ்தர் வெளிப்படுத்திய தகவல்

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும். வடக்கு, கிழக்கில் காணப்படும் பிரச்சினைக்கு முன்வைக்கப்படும் விடயங்கள் குறித்து ஆராயப்படும்.

தற்போதைய சூழ்நிலையில் சஜித் பிரேமதாஸவை விட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க கூடிய வேறு வேட்பாளார் ஒருவர் இல்லை. இதனால் எங்கள் கட்சி நிச்சியமாக சஜித்திற்கே ஆதரவு வழங்கும்.

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ள ராஜபக்ஷர்களுடன் கூட்டணி வைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதும் விரும்பாது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வட, கிழக்கு மக்களின் வாக்குகள் முக்கியமாகும். அந்த மக்களுக்கு தெளிவுபடுத்திய பின்னரே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து கோரிக்கை விடுக்க முடியும். அப்படி செய்யும் போது மக்களுக்கு சஜித் பிரேமதாஸவையே அடையாளப்படுத்த முடியும்.

அனைத்து வேட்பாளர்களும் சிங்கள பௌத்த ரீதியில் செயற்படுவர்களாக இருந்தாலும் வேட்பாளர் களமிறங்கும் கட்சியின் பொது கொள்கைகள் நோக்கி பார்க்கும் போது ஐக்கிய தேசிய கட்சிக்கே முதன்மை இடம் வழங்க நேரிடுகின்றது. அப்படி என்றால் நாங்கள் சஜித்திற்கே ஆதரவு வழங்க நேரிடும் என சரவணபவன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.