சமாதானத்துக்காக அணிதிரளுமாறு அறைகூவல் விடுத்துள்ள தேரர்

Report Print Rusath in அரசியல்

அறிவீனமான முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு இலங்கையில் உள்ள எந்த மதத்தினராயினும் அழிவுகளைத் தேடிக் கொள்ளக் கூடாது, எல்லோரையும் தான் சமாதானத்துக்காக அணிதிரளுமாறு அறைகூவல் விடுப்பதாக கெப்பிட்டகொல்லாவ ஹஸ்யப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வாகரைக்கு இன்று இலங்கையின் 18 மாவட்டங்களிலிருந்தும் சர்வ மதத் தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் விஜயம் செய்துள்ளனர்.

தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர்.மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இவ்விஜயத்தின்போது, சர்வமத செயற்பாட்டாளர்கள் வாகரையில் கத்தோலிக்கர் அல்லாத மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்காக சர்வமத அமைப்பின் முயற்சியினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட மயான பூமிக்கு முதலில் சென்றனர்.

மயானத்துக்கருகில் ஒன்று கூடிய சர்வ மத செயற்பாட்டாளர்கள் மத்தியில் தேரர் கருத்துரைத்தார். இதன்போது அவர்,

இந்நாட்டில் ஒன்றாகப் பிறந்தவர்கள், ஒன்றாக வளர்ந்தவர்கள், ஒன்றாக விளையாடியவர்கள், ஒன்றாக சந்தைக்குச் சென்றவர்கள், ஒன்றாக வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியம் பெற்றவர்கள், ஒன்றாக வாழ்ந்தவர்கள், இறுதியில் மரணச் சடங்குக்கும் எல்லோரும் ஒன்றாகவே வருகிறார்கள்.

ஆனால், அடக்கம் செய்யும்போது தான் பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. மரணித்த பின்னர் பிரச்சினை மேற்கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது.

ஒருவர் மரணித்த பின்னர் அவரது பதவியோ, பட்டமோ, அந்தஸ்தோ, சாதி, சமயமோ கொண்டு அழைக்கப்படுவதில்லை. மரணித்தவரை வெற்றுடல் என்றுதான் சொல்கின்றோம்.

மனிதர்கள் மரணித்த பின்னரும் வெற்றுடலை வைத்துக் கொண்டு முரண்பாடுகளை வளர்த்து இலங்கையை அழிவு பூமியாகவும், நரக பூமியாகவுமே மாற்றப் பார்க்கிறார்கள்.

ஆனால், இவை அர்த்தமற்ற முரண்பாடுகள். இதனை நாம் புரிந்துகொண்டு அமைதிக்கு வழிதேட வேண்டும். சமாதானத்திற்கான வழி மனங்களில் திறக்கப்பட வேண்டும்.

பௌத்த பிக்குகள் இறந்தாலும் அவர்களை அடக்கம் செய்யும் அறிவித்தல் பலகை இடுவதில்லை. அதேபோலத் தான் சிங்களவர், முஸ்லிம், தமிழர், கிறிஸ்தவர் எவர் இறந்தாலும் அவர் இறந்தவரே தான், இந்த முரண்பாடுகளை நீக்குவதற்குத்தான் சர்வமத செயற்பாட்டாளர்கள் இணைந்துள்ளார்கள்.

அறிவீனமான முரண்பாடுகள் அகற்றப்பட வேண்டும். மதங்களைக் கடந்து வேறு பல வேறுபாடுகளைக் கடந்து மனிதன் என்ற அடிப்படையில் ஒன்றுபடுவோம் வாருங்கள் என்று அறைகூவல் விடுக்கவே நாம் வாகரைக்கும் மட்டக்களப்புக்கும் நாட்டின் இதர பகுதிகளுக்கும் பவனி வருகின்றோம் என அவர் கூறியுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரட்ன, திட்ட உதவி முகாமையாளர் ரஷிகா செனவிரெட்ன, திட்ட அலுவலர் கிங்ஸ்லி ராஜசிங்கம் ஆகியோருட்பட இன்னும் சில துறைசார்ந்த வளவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...