கோத்தபாயவுக்கு இன்னும் கண்டம் கழியவில்லை!

Report Print Rakesh in அரசியல்

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதற்கான சிக்கல்கள் இன்னமும் முழுமையாகத் தீரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

நாளை அவர் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர், ஆட்சேபனைக் காலத்தில் அவரது குடியுரிமை விவகாரம் மீளவும் அவருக்குச் சிக்கலைக் கொடுக்கக் கூடும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகின்றது.

குடியுரிமை தொடர்பில் ஆட்சேபனையை எந்தவொரு தரப்பு எழுப்பினாலும், அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராயும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவால் நேரடியாகத் தீர்க்கப்படக் கூடியதாக இருந்தால் உடனடியாகப் பதில் வழங்கப்படும். இல்லாவிடின், உயர்நீதிமன்றத்தை நாடுவோம். உயர்நீதிமன்றம் குறித்த காலப் பகுதிக்குள் அது தொடர்பில் ஆராய்ந்து முடிவை அறிவிக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் குடியுரிமைச் சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் முடிவுகள் பாதகமாக அமைந்தால், கோத்தபாய கைதுசெய்யப்படக் கூடிய நிலைமையும் காணப்பட்டது. இதனையடுத்து, மஹிந்த அணி அவசர அவசரமாக மாற்று வேட்பாளராக சமல் ராஜபக்சவை நியமித்து கட்டுப்பணமும் செலுத்தியது.

இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த 2ஆம் திகதியிலிருந்து நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வரையில் நடைபெற்றது. நீதியரசர்கள் வழக்கைத் தள்ளுபடி செய்து கட்டளையிட்டனர்.

இதனையடுத்து கோத்தபாய ராஜபக்ச தரப்பு வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்துத் தடைகளும் நீங்கியுள்ளதாக அந்தத் தரப்பு நம்பிக்கை வெளியிட்டிருந்தது.

ஆனாலும், கோத்தபாயவுக்கு இன்னமும் கண்டம் கழியவில்லை என்று அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

நாளை வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ளது. வேட்புமனுத் தாக்கல்கள் முடிவடைந்த பின்னர், வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள் தொடர்பில் ஆட்சேபனை எழுப்ப முடியும்.

இதன்போது, கோத்தபாயவின் குடியுரிமை மற்றும் இரட்டைக் குடியுரிமை துறப்புத் தொடர்பில் ஆட்சேபனை எழுப்பப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

கோத்தபாயவுக்கு எதிராக ஆட்சேபனை எழுப்பப்பட்டால் தேர்தல்கள் ஆணைக்குழு உடனடியாக தீர்த்து வைக்கக்கூடிய, பதில் வழங்கக் கூடிய விடயமாக இருந்தால் உடனே பதில் வழங்கும். இல்லாவிடின் உயர்நீதிமன்றத்தை நாடும். உயர்நீதிமன்றம் குறுகிய காலத்துக்குள் அது தொடர்பில் தனது நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தும்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலும் ஜனாதிபதியின் அதிகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றமே பொருள் கோடல் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளமையால், கோத்தபாய தேர்தலில் போட்டியிடுவதற்கான தடை இறுதி நேரத்திலும் வரலாம் என்று எதிர்வுகூறப்படுகின்றது.