மக்களுக்காக ஆரம்பிக்க இருக்கும் செயலணி: மனோ கணேசன்

Report Print Thirumal Thirumal in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டால் மலையக மக்களின் சகல பிரச்சினைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு ஜனாதிபதி செயலணி ஒன்றை ஆரம்பிப்பதத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முகமாக ஹட்டனில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தின் போது அவர் இதனை கூறியுள்ளார்.

சஜித்துடன் நாட்டை வெற்றிக்கொள்ளும் போராட்டம் எனும் தொனிப்பொருளில் இந்த பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இன்று வடக்கில் மாத்திரம் தான் ஜனாதிபதி செயலணி ஒன்று உள்ளது. ஆனால் நாங்கள் அவரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அவர் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இன்று பலர் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் வேற்றுமைகளை ஏற்படுத்தி அரசியல் செய்ய முயற்சி செய்கிறார்கள்.

அவற்றையெல்லாம் முறியடித்து. நாம் மலையகப் பகுதியில் முன்னெடுத்து அபிவிருத்தியினை முன்னெடுக்க வேண்டும் அதற்கு சிறந்த தலைவர் சஜித் பிரேமதாச. எனவே, அவரை வெற்றிபெறச் செய்வதற்கு வழி செய்ய வேண்டும்.

மலையகத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாக்கிய பின் மலையகத்தில் பேச்சஸ் காணியுடன் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. மலையக அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதேசசபைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இன்றும் பிரதேச செயலகங்கள், கிராம சேவகர் பிரிவுகள் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் மலையகத்தில் வீடமைப்புக்கள் வழங்கும் போது ஒரு வீட்டில் மூன்று நான்கு குடும்பங்கள் இருந்தால் அவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனி வீடுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.