மலையகத்தில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை! சஜித்தே ஜனாதிபதி: திகாம்பரம்

Report Print Thirumal Thirumal in அரசியல்
47Shares

இந்த நாட்டில் வாழும் மலையக இந்திய வம்சாவளியினருக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுத்தவர் முன்னாள் ஜனாதிபதி அமரர்.ரணசிங்க பிரேமதாச எனவே பிரேமதாசவின் புதல்வர் சஜித் பிரேமதாச இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நுவரெலியா மாவட்ட மக்கள் கடந்தக் கால ஜனாதிபதி தேர்தல்களை விட அதிகப் படியான வாக்குகளால் இவரை தெரிவு செய்து தமிழ் முற்போக்கு கூட்டணியை பலப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஹட்டனில் இன்று காலை சஜித்துடன் நாட்டை வெற்றிக்கொள்ளும் போராட்டம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் முதலாவது பிரச்சார கூட்டம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர்,

1948ஆம் ஆண்டு குடியுரிமை பறிக்கப்பட்டு 1988ஆம் ஆண்டில் நமது மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. இந்த காலப்பகுதியில் ஒருவர் மாத்திரமே கஷ்டப்பட்டுள்ளார்.

1988ஆம் ஆண்டின் பிறகு நாடாளுமன்றம், மாகாண சபை, பிரதேச சபை ஆகிய உறுப்பினர்களை உருவாக்குவதற்காக ஒருவர் மாத்திரம் கஷ்டப்பட்டு வந்துள்ள நிலையை மறப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளனர்.

கடந்தக் கால ஜனாதிபதி தேர்தலின் போது நாம் மக்களுக்கு கூறியிருந்தோம். நாம் எவரை தெரிவு செய்கின்றோமோ அவருக்கு வாக்களியுங்கள் என்று. அதேபோன்று நுவரெலியா மாவட்ட மக்கள் அடங்கிய மலையக மக்கள் அனைவரும் வாக்குகளை அளித்துள்ளார்கள்.

அதன்போது நாம் மலையக மக்களுக்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

இம்முறை சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரை வெற்றியடையச் செய்ய முழு இந்திய வம்சாவளி மக்களும் வாக்களிக்க வேண்டும்.

அதேநேரத்தில் நுவரெலியா மாவட்ட மக்கள் கடந்தக் காலங்களை விட அதிகபட்ச வாக்குகளால் இவரை வெற்றியடைய செய்ய வேண்டும் என சுஜிவ சேனசிங்க வலியுறுத்தினார்.

நாட்டில் குடும்ப ஆட்சி நிலவுகிறது. ராஜபக்சவின் குடும்ப ஆட்சி நாட்டில் நிலவியது போல மலையகத்திலும் தனி ஒருவரின் குடும்ப ஆட்சி நிலவியது. இந்த குடும்ப ஆட்சியை இல்லாதொழித்தது தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகும்.

கடந்த காலங்களை போல விளையாட்டுக்களை மலையகத்தில் விளையாட யாருக்கும் இடம் கொடுக்கப் போவதில்லை. யாருக்கும் பயப்படவும் வேண்டாம். நான் பயப்படவும் போவதில்லை. கடந்த நான்கு வருடங்களில் அமைச்சராக இருந்த நான் எந்த கள்ள வேலைகளையும் செய்யவில்லை.

நான்கு வருட காலமாக மக்களுக்கான அபிவிருத்தி வேலைகளை செய்துள்ளேன். தொடர்ந்தும் செய்து வருகின்றேன்.

சஜித் பிரேமதாச ஆட்சியை கைப்பற்றும் போது தான் வகிக்கும் இதே அமைச்சியை பெற்று மேலும் அபிவிருத்திகளை செய்து முடிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.