விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவை ஏன் ரணில் பிரித்தார்? தூர நோக்க சிந்தனையின் பின்னணி

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவை பிரதமர் ரணில் பிரித்ததன் பின்னணியில் ஒரு தூர நோக்கம் இருந்ததது. அதன் விளைவாக போரை விரைவாக முடிக்க முடிந்தது என அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் பேசிய அவர்,

1977 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் கே.டபிள்யூ.தேவநாயகம் மேற்கொண்ட அபிவிருத்திப் பணிகளின் பின்னர் தற்போதைய அரசாங்க காலத்தில்தான் பெரும்பாலான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நீங்கள் முப்பது வருடகால போர்ச் சூழலினால் பாதிக்கப்பட்டவர்கள். அந்தப்போரினால் போரில் ஈடுபட்டவர்கள் எதனையும் அடைந்து கொள்ளவுமில்லை. மக்களுக்கும் எந்தப்பயனும் கிடைக்கவுமில்லை.

இந்த இடத்திலே நண்பர் அலி ஸாஹிர் மௌலானாவை நினைவுகூர வேண்டியுள்ளது. நாட்டில் தற்போது நிலவுகின்ற இயல்பு நிலைக்காக அவர் பாரிய பங்காற்றியுள்ளார்.

அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானைப் பிரித்து சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கச் செய்ததையடுத்து ஆயிரக்கணக்கான போராளிகள் ஜனநாயக வழிக்குத் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையை ஏற்படுத்த எமது பிரதமர் ரணில் விக்ரமசிங்கதான் தலைமை வகித்தார். அவரது தூரநோக்கான சிந்தனை கொண்ட நடவடிக்கையினால் தான் போரினை விரைவாக முடிக்கக் கூடியதாக அமைந்தது.

முப்பது வருடகாலப் போரினால் நாம் எமது இளைஞர்களை இழந்தோம். அபிவிருத்திகளை இழந்தோம். அபிவிருத்தியில் மூன்று தசாப்த காலம் பின்னடைவில் உள்ளோம். ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு அபிவிருத்திப் பணிகள் மிகவும் மந்தமாகவே காணப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் நான்கு ஆண்டு காலப்பகுதியில் அபிவிருத்திப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.