உங்களுக்கு பக்கபலமாக என்றும் உறுதுணையாக இருப்போம்! தென்னிந்திய இயக்குநர் உறுதி

Report Print Kumar in அரசியல்

இந்த மண்ணில் உயிர்த்தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு சுதந்திர தமிழீழ தாயகம் கிடைக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. அவர்களுடைய கனவை நாளைய தலைமுறையாகிய நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. அந்த நம்பிக்கைகைக்கு நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம் என தென்னிந்திய பிரபல இயக்குனரும் நடிகருமான அமீர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு லயன்ஸ் கழகமும் லண்டன் அகிலன் பவுண்டேசனும் இணைந்து நடாத்தும் சாதனையாளர் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (06-10)சிறப்பாக நடைபெற்றது.

கல்வி, விளையாட்டு, ஊடகத்துறை ஆகியவற்றில் உள்ளவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது. இங்கு தொடர்ந்து உரையாற்றிய இயக்குனர் அமீர்,

இங்கு வழங்கப்பட்டுள்ள பாராட்டுகள் என்பது அடுத்த தலைமுறையினரை உருவாக்குவதற்கான பாராட்டாகவே நான் பார்க்கின்றேன்.

இந்த சமூகம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது, இந்த சமூகத்தில் பேசும் மொழி என்ன, நாங்கள் எந்த இனத்தினை சார்ந்தவர்கள், எமது எதிர்காலம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது, எமது தலைக்கு மேலே என்ன அரசியல் இருக்கின்றது என்பதை இந்த வயதில் மாணவர்களினால் உணரமுடியும்.

இந்த பாராட்டு என்பது இந்த சமூகத்தில் என்னவிதமான அரசியல் சூழ்நிலையிருந்தாலும் அதையெல்லாம் கடந்து போராடி முன்னேறி ஒரு உயர் நிலையினை அடைவதற்கான ஒரு முதல் படிக்கட்டுதான் இந்த விருதுகளாகும். ஒரு தகப்பனை விட சிறந்த ஆசான் உலகத்தில் யாரும் இருக்கமுடியாது.

இந்த நிகழ்வு முழுமையான சந்தோசத்தினை எனக்கு வழங்கவில்லை. இந்த மண்ணின் பூர்வீக குடிகளான தமிழ் மக்கள் தமது உரிமைக்காக 30வருட காலமாக ஒரு ஆயுதப்போராட்டத்தினை நடாத்தி அந்த போராட்டம் 17நாட்டு இராணுவ வீரர்களினால் தோற்கடிக்கப்பட்டு ஒரு இக்கட்டான நிலை தோற்றுவிக்கப்பட்டது.

என்னைப்பொறுத்தவரையில் இதுபோன்ற ஓரு விழா சுதந்திர தனி தமிழீழத்தில் நடைபெற்றிருக்குமானால் என்னைவிட சந்தோசப்படக்கூடியவர்கள் வேறு யாரும் இருக்கமுடியாது.

சர்வதேச அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக சுதந்திர தமிழீழம் வெறும் கனவாக போய்விடக்கூடிய சூழ்நிலையில் நாங்கள் இருந்துகொண்டிருக்கின்றோம். அதுவெறும் கனவு கிடையாது. தற்போது எமக்கு ஏற்பட்டுள்ள நிலையென்பது ஒரு தற்காலிக பின்னடைவாகும். சூரியன் உதிக்கும்போது வீட்டுக்கதவினை மூடிவிட்டால் சூரிய ஒளி வீட்டுக்குள் வராது என்ற பொய்யான நம்பிக்கையினை கொண்டுள்ளோம். இவ்வாறான பொய்யான விம்பமே இன்று சுதந்திர தமிழீழத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இன்று சுதந்திர தமிழீழ கனவு என்பது தமிழ் மக்களிடம் இருந்து குறையவில்லை. இராணுவ நடவடிக்கைகள் காரணமாக கண்கள் மூடப்பட்டுள்ளதே தவிர தமிழர்கள் எங்கு மேலோங்கி நிற்கின்றார்களோ அங்கு எல்லாம் இந்த உணர்வும் மேலோங்கியே உள்ளது.

மீண்டும் இந்த மண்ணில் ஆயுத போராட்டத்தினை நடாத்தக்கூடிய சூழ்நிலையில்லை. இன்று உள்ள ஆயுதம் எமது கல்வி, தொழில், பொருளாதாரம் ஆகும். இதுவே இன்று எம்மிடம் இருக்கவேண்டிய முக்கிய ஆயுதமாகும். வெற்றியென்ற ஒன்றை யாரும் தடுத்து நிறுத்திவிடமுடியாது.

எந்தவிதமான அரசியல் சூழ்ச்சி உங்கள் முன்பாக இருந்தாலும் உங்கள் மீது எந்த அதிகாரங்கள் அழுத்தங்களை வழங்கினாலும் கல்வியில் சிறந்து விளங்குபவர்கள் இன்னும் படித்து அதிகார நிலைக்கு வரவேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்து அதன் மூலம் இந்த மண்ணிற்கான உரிமையை, மக்களிற்கான உரிமையை மீட்டெடுக்க முயற்சி செய்யுங்கள்.

நன்கு படிக்க முடியாதவர்கள் உங்களால் செய்ய முடிந்த தொழிலில் முன்னேறி அதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துங்கள். மீண்டும் இந்த மண்ணை, மக்களை மீட்டெடுக்க வேண்டுமானால் உங்களிடம் உள்ள ஆயுதம் மூன்று தான். ஒன்று அரசியல் ரீதியான நிரந்தர தீர்வு, மற்றையது கல்வியின் மூலம் உயர்ந்த இடத்திற்கு செல்வது, இன்னுமொன்று இழந்த செல்வங்களை மீட்டெடுத்து முன்னேறுவதாகும். இவற்றை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.

போராட்ட வேட்கை உங்களிடமிருந்து வெளிச் செல்லவில்லை. அது வெளியில் செல்லவும் கூடாது. போராட்ட வடிவத்தை மாற்றுங்கள். அதன் வடிவத்தை மாற்றவேண்டிய பொறுப்பு இன்றைய இளைய தலைமுறையின் கைகளில் இருக்கின்றது. அதை பெரியவர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். நமது பூர்வீகம் என்ன, இந்த மண்ணிற்கும் நமக்குமான தொடர்பு என்ன, நமது மொழியின் சிறப்பு என்ன என்பதை இளைய தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இந்த உலகின் எல்லா நாட்டைச் சேர்ந்தவர்களும் அவரவர் தாய்மொழியில் பேசுவதை கெளரவமாக நினைக்கின்றனர். ஆனால் நாம் மட்டும் தான் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியான தமிழில் பேசிக்கொண்டு இருக்கின்றோம். அப்படிப்பட்ட மொழிக்கு சொந்தக்காரர்கள். தமிழகத்தில் நாங்கள் பயன்படுத்தாத சில தமிழ் வார்த்தைகளையெல்லாம் இந்த மண்ணில்தான் காண முடிகின்றது. அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

அப்படிப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரர்களான நீங்கள் ஏன் நாம் அதிகாரத்திற்கு வரவேண்டும், ஏன் நாம் அரசியல் குறித்து பேச வேண்டும் என்பதை விளங்கி உங்களுடைய போராட்ட வடிவத்தை மாற்றிக்கொள்ளுங்கள். போராடும் குணத்தை என்றுமே மாற்றிக்கொள்ளாதீர்கள்.

இளைய தலைமுறையாக இருக்கக்கூடிய நீங்கள் தான் வேட்கையோடு செயற்பட்டு இந்த மண்ணில் எப்படி அனைத்து மக்களுக்குமான சுதந்திர தமிழீழ தாயகத்தை உருவாக்க வேண்டுமென்ற தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் கனவை உங்களைப் போன்றவர்கள் அரசியல் தீர்வாக பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இந்த மண்ணை விட்டுச் செல்கின்றோம். நிச்சயமாக ஒரு நாள் சுதந்திர தமிழீழ தாயகம் மலரும் என்ற நம்பிக்கையை, பொறுப்பை உங்களிடம் கொடுத்துவிட்டுச் செல்கின்றோம்.

நமது வாழ்க்கையில் ஒவ்வொன்றும் அரசியலாகும் நமக்கு எதற்கு அரசியல் என நாம் நினைக்கக்கூடாது. காலை நீங்கள் விழித்தது முதல் இரவு உறங்கும்வரை நீங்கள் என்ன உணவு உண்ண வேண்டும், எந்த உடை அணிய வேண்டும், எதை பார்க்க வேண்டும், எதை கேட்க வேண்டும் போன்ற எல்லா விடயங்களையும் தீர்மானிப்பது அரசியலாகும்.

முப்பது ஆண்டு கால யுத்தத்தில் காணாமல் போனவர்கள், உயிர் தியாகம் செய்தவர்கள் இருக்கின்றனர், இலட்சக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் கொன்றழிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த மண்ணை நாங்கள் ஆள வேண்டும், சுதந்திர தமிழீழ தாயகம் கிடைக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. அவர்களுடைய கனவை நாளைய தலைமுறையாகிய நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. அந்த நம்பிக்கைகைக்கு நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம் என்றார்.

மட்டக்களப்பு லயன்ஸ் கழக தலைவர் தேசமானிய லயன் வ.இ.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் சினிமா உலகின் இயக்குனர் இமயமாக கருதப்படும் பெ.பாரதிராஜா,இயக்குனரும் நடிகருமான அமீர்; ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி பணிப்பாளர் எஸ்.சிறிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது சாதாரண தரம் தொடக்கம் உயர்தரம் வரையிலும் விளையாட்டுத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் சிறப்பாக செயற்பட்டுவரும் ஊடகவியலாளர்கள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது விசேட தேவையுடைய பிள்ளைகளின் கலை நிகழ்வுகள் பல நடைபெற்றதுடன் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டதுடன் வறிய மக்களுக்கான உதவிகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

Latest Offers

loading...