சிவாஜிலிங்கத்திற்கு மனநோய்? பிரசன்னா இந்திரகுமார்

Report Print Kumar in அரசியல்

எந்த தேர்தல்கள் வந்தாலும் சிவாஜிலிங்கம் போன்றவர்களுக்கு மனநோய் ஏற்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

2010ம் ஆண்டு அவர் ஜனாதிபதி தேர்தலில்போட்டியிட்டபோது அவரை கட்சியில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதிலும் சில தமிழ் தலைவர்கள் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் மீண்டும் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டதாகவும் ஆனால் இனியொருபோதும் அவர் உள்வாங்கப்படமாட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் தலைவருமான சீ.மு.இராசமாணிக்கம் அவர்களின் 45வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வு இன்றைய தினம்(07) இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இரா.சாணக்கியன் தலைமையில் களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளர் சிவாஜிலிங்கம் அவர்கள் அனந்தி சசிதரனுடன் இணைந்து நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க கட்டுப்பணம் செலுத்தி இன்றைய தினம் வேட்புமனு தாக்கலும் செய்துள்ளார் என அறிகின்றோம்.

இது தொடர்பாக எமது தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் நேற்றைய பத்திரிகையாளர் மாநாட்டில் எமது கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தார்.

அந்த அடிப்படையில் அக் கட்சியின் உபதலைவர் என்ற ரீதியில் கட்சியின் எவ்வித அனுமதியும் இன்றிய அவரின் செயற்பாட்டுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாங்கள் பல நெருக்கடியான காலகட்டத்தில் பல்வேறு தேர்தல்களைச் சந்தித்துள்ளோம். 2009ம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் போர்வைக்குள் வந்தவர்கள் அவர்களின் தனிப்பட்ட சுயலாபங்களை நோக்கமாகக் கொண்டு பல்வேறு செயற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

சிவாஜிலிங்கம் அவர்கள் இதேபோன்று கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டார். அப்போதே இவருக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள கட்சியினால் முடிவெடுக்கப்பட்டது.

இருப்பினும் எமது சகோதர கட்சிகளின் சில தலைவர்களின் ஆலோசனைக்கமைவாக அச்செயற்பாடு நிறுத்தப்பட்டது. ஆனால் அவர் திரும்பவும் இவ்வாறானதொரு செயற்பாட்டினைச் செய்திருக்கின்றார்.

இதனை இவ்வாறே விட்டுவிட முடியாது இவருக்கான தகுந்த நடவடிக்கை எடுத்தே தீருவோம். எந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்ற ஒருவகையான மனநோய்க்கு சிவாஜிலிங்கம் உள்ளாகியுள்ளாரோ தெரியவில்லை என்று தெரிவித்தார்.

Latest Offers

loading...