கோத்தபாய ராஜபக்ச மீது மகிந்த கொண்டுள்ள நம்பிக்கை!

Report Print Murali Murali in அரசியல்

நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவினால் மாத்திரமே உறுதிப்படுத்த முடியும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்பிகை வெளியிட்டுள்ளார்.

காலி - வெலிகம பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“இன்று மக்கள் பாரிய அச்சத்துடனேயே வாழ்கின்றனர். 10 வருடங்களாக இருந்த அச்சமற்ற சந்தேகமற்ற யுகத்தை கடந்து இன்று பயத்துடன் வாழ்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

கிறிஸ்தவர்களுக்கு தேவாலயங்களுக்கு செல்ல அஞ்சுகின்றனர். இந்து மக்கள் கோவில் செல்ல பயப்படுகின்றனர். அதேபோலதான் முஸ்லிம் மக்களும் பயம் சந்தேகத்துடனேயே பள்ளிவாசலுக்கு செல்கின்றனர். இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது.

நாட்டில் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்தான். தேசிய பாதுகாப்பு என்பது என்ன? சிங்கள பௌத்த மக்களின் பாதுகாப்பு மட்டுமல்ல, தமிழ், சிங்கள, முஸ்லிம் பரங்கியர் உள்ளிட்ட அனைவருக்குமான பாதுகாப்புதான் தேசிய பாதுகாப்பிலிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது.

அப்படியானால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்பது நம் அனைவருடைய பாதுகாப்பும் அச்சுறுத்தலாகியதற்கு சமமாகும். எனவே தேசிய பாதுகாப்பை பலப்படுத்தவே நாங்கள் முதலிடம் வழங்க வேண்டும்.

தேசிய பாதுகாப்பு நாட்டில் இருந்தால் அனைத்து இன மக்களுக்கும் சமமாக வாழக்கூடிய உரிமை பெறப்படும். வரலாற்றில் முதற்தடவையாக வெள்ளிக்கிழமையன்று பள்ளிவாசலுக்கு செல்லமுடியாத நிலை ஏன் ஏற்பட்டது?

பேருவளை சம்பவத்தை பார்க்கும்போது, பாதுகாப்பு செயலாளர் நாட்டில் இருக்கவில்லை. நாடு திரும்பிய கையுடன் அவர் பேருவளைக்குச் சென்று பிரச்சினையை தீர்த்துவைத்தார்.

கிங்கொட்டை பிரச்சினையின்போது யாராவது தீர்வுகொடுக்க வந்தார்களா? அம்பாறையில் திகனையில் தாக்குதல்கள் இடம்பெற்றபோது சென்றார்களா? பிரச்சினை தீர்க்கப்பட்டதா?

திகனையில் தாக்குதல் இடம்பெற்ற போது நாங்கள்தான் அங்கு சென்றோம். நாங்கள் இடத்திற்கே சென்று தீர்வுகொடுக்க ஆயத்தமாக இருந்தோம். ஆனால் இந்த அரசாங்கம் அக்கறையின்றி செயற்படுகிறது. அதேபோல இந்த அரசாங்கம் பழிவாங்கலை மட்டுமே செய்தது.

எனினும் இன்று கோத்தபாய ராஜபக்ச மீது நம்பிக்கையொன்று உள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவரிடம் நாட்டை ஒப்படைக்கின்றோம். அரசாங்கம் எமது குடும்ப அங்கத்தவர்கள் அனைவர் மீதும் வழக்குகளை தாக்கல் செய்திருக்கின்றது.

இன்று நாட்டு மக்களுக்கு தேவையான பாதுகாப்பை யாரால் வழங்க முடியும்? கோட்டாபய ராஜபக்சவினால் தகுந்த பாதுகாப்பை நிச்சயம் வழங்க முடியும் என்பதை அச்சமின்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.

பொய்யான பிரசாரங்கள் இன்று இடம்பெற்றாலும் அதனை நம்பவேண்டாம். நாங்கள் இனவாதிகளும் அல்ல. ஆனால் தீவிரவாதத்தையே எதிர்க்கின்றோம். இனங்களை அல்ல” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...