தமிழ் மக்களை கொள்கை வழியிலே வழி நடத்துபவர்கள் நாங்களே! தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்

Report Print Kumar in அரசியல்

தமிழ் மக்களை கொள்கை வழியிலே வழி நடத்துகின்றதும், சாயம் போகாத உறுதியான கொள்கைகளைக் கொண்டதுமான ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருக்கின்றது. வெறுமனே அன்றன்றைக்கு வருகின்ற செய்திகளை மாத்திரம் கருத்திற்கொண்டு முடிவுகளை எடுக்கும் கட்சியாக இருக்கமாட்டாது.

வரலாற்று ரீதியாக எங்களது கொள்கைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் எமது முடிவுகள் அமையும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் சீ.மு.இராசமாணிக்கம் 45வது நினைவுதின நிகழ்வில் கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது பலவிதமான குற்றச்சாட்டுக்களுக்கும், விமர்சனங்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இந்த விமர்சனங்களைக் கேட்டு தளர்வு அடைய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நாங்கள் தான் தமிழ் மக்களை கொள்கை வழியிலே வழிநடத்துகின்ற ஒரே கட்சியாக இருக்கின்றோம்.

எந்தவிதமான விமர்சனங்கள் வந்தாலும் சரி தந்தை செல்வா, இராசமாணிக்கம் போன்ற தலைவர்களால் வழித்தப்பட்ட, தற்போது சம்பந்தன் அவர்களால் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமது கட்சியின் கொள்கைகள் சாயம் போகாத உறுதியான கொள்கைகளாக இருக்கும்.

இப்போது கிழக்கு மாகாணத்திற்கென்று தனியான ஒரு அரசியல் மூலோபாயத்தினை வகுத்திட வேண்டும் என்று பலர் முன்வருகின்றார்கள். தற்போது இறுதியாக ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற நடவடிக்கைக்குக் கூட அவர்கள் சென்றார்கள். தற்போது அவர்கள் அந்த விடயத்தைக் கைவிட்டுவிட்டார்கள்.

ஏனெனில் தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற விடயம் தமிழ் மக்களின் வாக்குகள் குறைக்கப்படுவதன் காரணமாக தமிழ் மக்களுக்கு எதிராக இருப்பவர்களின் வாக்குப் பலத்தினை அதிகரிக்கச் செய்கின்ற ஒரு செயற்பாடாக அமைந்து விடும்.

வரலாற்றுத் தலைவர்களின் வழிநடத்தலின் கீழ் செயற்படுகின்ற எமது கட்சி வெறுமனே அன்றன்றைக்கு வருகின்ற செய்திகளை மாத்திரம் கருத்திற்கொண்டு முடிவுகளை எடுக்கும் கட்சியாக இருக்கமாட்டாது.

வரலாற்று அடிப்படையிலே எங்களது கொள்கைகளை யார் யார் அங்கீகரிக்க இருக்கின்றார்கள் என்பதைக் கவனத்திற் கொண்டே வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முடிவினை எடுக்கும். அந்த முடிவு நாங்கள் ஏற்கனவே இருக்கின்ற களத்தின் அடிப்படையிலே எங்களது அடுத்த கட்டத்தினை நகர்த்திச் செல்வதற்கான ஒரு வழிவகையாக அமையும் என்று தெரிவித்தார்.