கோத்தபாய வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சத்திவாய்ந்த அம்மன் ஆலயத்தில் வேண்டுதல்

Report Print Varunan in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற வேண்டும் என யாகத்தினை செய்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய வெற்றிபெற வேண்டும் என கோரி அக்கரைப்பற்று - சின்ன பனங்காடு நாககாளி அம்மன் ஆலயத்தில் விசேட யாக பூஜையொன்று இடம்பெற்றுள்ளது.

நாககாளி அம்மன் ஆலயத்தலைவர் ஆறுமுகம் கந்தையா தலைமையில் நேற்றைய தினம் இந்த விசேட யாக பூஜையானது நடத்தப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்டு பூஜைகளின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற வேண்டும் என்று யாகத்தினை செய்து வருகின்றோம். இது சக்தி வாய்ந்த அம்மன் ஆலயம்.

நிச்சயம் எங்கள் வேண்டுதல் பலிக்கும். வரப்போகும் தேர்தலில் நாட்டிற்கு நல்ல தலைவனை மாத்திரமல்ல, நல்ல ஒரு தந்தையை தேர்ந்தெடுக்க போகின்றோம்.

இந்த ஆட்சிக்காலத்தில் மக்கள் படும் இன்னல்களை யாவரும் அறிவர். இவ்வாறான அவஸ்த்தையிலிருந்து மக்களை பாதுகாத்து நாட்டை சுபீட்சமான பாதைக்கு இட்டுச் செல்லக்கூடிய தலைவர் கிடைத்திருக்கிறார்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வருவார் என்ற நல்லெண்ண அடிப்படையில் மன்றாட்டமாக வேண்டுதலை முன்வைத்து வருகின்றோம்.

அது நிச்சயம் நடக்கும். அதற்கு பிராயச்சித்தமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆலயங்களை புனரமைக்க உள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.