நீராவியடி ஆலய விவகாரத்தில் தமிழர் தரப்பாலேயே குழப்பம்: நாடாளுமன்றில் வாதிட்ட மஹிந்த தரப்பு

Report Print Rakesh in அரசியல்
298Shares

முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய விடயத்தில் தமிழர் தரப்பே குழப்பங்களை ஏற்படுத்தி ஒட்டுமொத்த சிங்கப் பௌத்த மக்களையும் வேதனைப்படுத்தியுள்ளது என்று மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கம தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நீராவியடிச் சம்பவம் தொடர்பாக இப்போது நாடாளுமன்றத்தில் பேசப்படுகின்றது. நல்லிணக்க அடிப்படையில் பெளத்த சிங்கள மக்கள் செயற்பட்டு வருகின்றனர்.

வடக்கில் சில இடங்களில் பெளத்த தேரர்கள் தொடர்பாகப் பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. வெள்ளையர்கள் ஆட்சியில் கூட ஆலயங்களில் அவர்கள் கைவைக்கவில்லை. இந்த இடத்தில் தேரர் வாழ்ந்துள்ளார்.

போர்க் காலத்தில் அவர் இடம்பெயர்ந்திருக்க முடியும். ஆனால், இந்த இடத்தில் அவர் வாழ்ந்தார். சிங்கள மக்கள் விட்டுக்கொடுப்புடன் தெற்கில் வாழ்கின்றனர். அவர்கள் தமிழ் மக்களை ஒருபோதும் நிராகரிக்கவில்லை.

கம்பளையை எடுத்துக்கொண்டால் அங்கு முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் நிலங்கள் விகாரைக்கு சொந்தமானது.

அதுபோலவே வடக்கிலும் விகாரைக்கு உடைய இடங்கள் உள்ளன. ஆனால், தமிழர்களை அங்கிருந்து நாம் விரட்டவில்லை.

பல சந்தர்ப்பங்களில் தமிழர்களைச் சிங்களவர்கள் பாதுகாத்துள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பு இருக்கலாம், நீதிமன்றத் தீர்ப்பு பெரும்பாலும் பொலிஸாரின் தகவல்களுக்கு அமையவே வழங்கப்படும்.

பொலிஸார் கொண்டுவரும் தகவல்கள் சரியாக இருக்கும் என்று அர்த்தம் இல்லை. கோத்தபாய ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோஆகியோருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன. இதுவும் அவ்வாறானதே.

இந்த நாடு சிங்கள பௌத்த நாடு. இங்கு தேரர்களின் தலைமைகளுக்கு இடமளிக்க வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் பிரச்சினைகள் இருக்காது. இந்த நிலப் பிரச்சினையைத் தேரர்களிடம் விட்டிருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்காது.

இந்தப் பிரச்சினை வளரத் தமிழ்த் தரப்பே காரணம். நீங்கள் பேசாது இருந்திருந்தால் ஒரு பிரச்சினையும் வந்திருக்காது.

நீங்கள் செய்த செயலால் தெற்கில் மக்கள் மத்தியில் பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அந்தத் தேரர் இறந்தால் அங்குதான் இறுதிக்கிரியைகள் செய்ய வேண்டும்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ளது. இங்கு கொழும்பில் சிங்கள மக்களுடன் வாழ்ந்துகொண்டு இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்துவது தவறானது என்றார்.