சுதந்திரக் கட்சியின் யோசனைகள் பற்றி அடுத்த தேர்தலில் பேசி இணக்கத்திற்கு வரலாம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள யோசனைகள் மற்றும் கொள்கைகள் சம்பந்தமாக எந்த சிக்கலும் இல்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சின்னம் தொடர்பான பிரச்சினை இந்த தேர்தலுக்கு சம்பந்தமில்லை. அடுத்த தேர்தல்களில் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி இணக்கத்திற்கு வருவோம். அடுத்த பொதுத் தேர்தலில் தமக்கு கிடைக்க வேண்டிய வேட்புமனுக்கள் தொடர்பாகவும் அவர்கள் யோசனை முன்வைத்துள்ளனர். அது குறித்து பேசி இணக்கத்திற்கு வர முடியும்.

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 51 சத வீத வேட்புமனுக்கள் கிடைக்க வேண்டும் என்று எமது கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 30 சதவீத வேட்புமனுக்களை கோரியுள்ளது.

எங்களுடன் 17 கட்சிகள் இருக்கின்றன. வேட்புமனுக்களை வழங்கும் போது, அந்த கட்சிகளுடன் கலந்துரையாட வேண்டும். இருக்கும் நிலைமைக்கு அமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோரிக்கை எமக்கு சிக்கலாக இருக்காது எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவது என்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்க முடியாது என ஜனாதிபதி அண்மையில் நடந்த கட்சியின் கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பாக பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றாக இணைந்து எதிர்ப்பது குறித்து கவலையடைவதாகவும் அவர் கூறியிருந்தார்.

மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கு பொதுஜன பெரமுன காரணமல்ல எனவும் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என சபாநாயகருக்கு வழங்கிய கடிதமே அந்த பதவி அவருக்கு கிடைக்க காரணம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோரிக்கை தொடர்பாக வளைந்து கொடுக்கும் தன்மையை பின்பற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.