பரப்புரைகள் ஆரம்பம்! - சூடுபிடிக்கும் களம்

Report Print Rakesh in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு திரட்டி நடைபெறும் முதலாவது பிரதான பரப்புரைக் கூட்டம் நாளை வியாழக்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் பங்காளிக் கட்சிக்களின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன், தொகுதி மட்டத்திலான பரப்புரையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் சஜித் பிரேமதாச ஆரம்பிப்பார் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கோத்தபாய ராஜபக்ச

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டும் முதலாவது பிரதான தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று அனுராதபுரத்தில் நடைபெற்றுள்ளது.

அனுராதபுரம் - சல்காடோ மைதானத்தில் பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகிய பரப்புரைக் கூட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களான துமிந்த திஸாநாயக்க, வீரகுமார திஸாநாயக்க ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

தொகுதிவாரியாக 138 பரப்புரைக் கூட்டங்களிலும், 26 பிரதான பரப்புரைக் கூட்டங்களிலும் கோத்தபாய ராஜபக்ச பங்கேற்பார் என அவரது பரப்புரை அணி அறிவித்துள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க

அதேவேளை, ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு திரட்டும் முதலாவது பிரதான பரப்புரைக் கூட்டம் நேற்று தம்புத்தேகமயில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.