இறுதி முடிவெடுக்க விரைவில் கூடுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Report Print Rakesh in அரசியல்
153Shares

ஜனாதிபதித் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுக் கலந்துரையாடல் நடத்தியது. எனினும், அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் விபரங்களை கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விளக்கியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும் சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தாமதமாக முடிவை அறிவிப்பது, ராஜபக்ச அணியின் பிரசாரங்களுக்கு வசதியாகி விடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த தேர்தல்களின்போது செய்ததைப் போல் போலி ஆவணங்களைத் தயாரித்து, இறுதி நேர இணக்கப்பாடு இதுதான் என மக்களை ஏமாற்றுவார்கள். அது பற்றி விளக்கமளிக்க அவகாசம் போதாமல் போய்விடும்" என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைமைகள் சந்திக்கும் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் விரைவில் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.