முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும்: ஏ.ஜே.எம்.முஸம்மில்

Report Print Gokulan Gokulan in அரசியல்

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலேயே முஸ்லிம் மக்களுக்கு எதிராக பாரிய வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடையில் எரிக்கப்பட்ட கடைகளுக்குப் பதிலாக புதிய கடைகளை வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அளுத்கம கலவரம் இடம்பெற்றது. சுமார் 24 மணித்தியாலத்தினுள் குறித்த கலவரத்தை மஹிந்த ராஜபக்ஷ அரசு முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. முழு நாட்டையும் பாதுகாத்தது.

அத்துடன் நின்றுவிடாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளையும் வழங்கத் துரித நடவடிக்கைகள் முன்னெடுத்து அதில் ஒருவருக்கு நான்கரை கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் திகனயில் ஒரு வாரமாகக் கலவரம் வெடித்தது, மினுவாங்கொட, கிந்தொடையில் முஸ்லிம்களின் உடைமைகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டது.

இந்த அரசாங்கம் என்ன செய்தது? காரணம் கேட்டால் மொட்டுக் கட்சியின் வேலை எனக் கூறி நழுவி விடுகிறது. பொலிஸ் அவர்களிடம், இராணுவம் அவர்களிடம். இவை அனைத்தையும் வைத்துக்கொண்டு கலவரம் செய்தவர்களைக் கைது செய்தார்களா?

ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு அடிக்கும் வரை காத்திருப்பதல்ல, இந்த நாட்டின் பிரஜைகள், மத ஸ்தலங்கள், பொதுமக்களின் உடைமைகள் அனைத்திற்கும் பாதுகாப்பு வழங்குவதே ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

யாரோ ஒரு காடையர் கூட்டம் இவ்வாறான வன்செயல்களில் ஈடுபடுவார்களானால், அவர்களைக் கைது செய்து தண்டனை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு.

அதை விடுத்து அடுத்தவர்கள் மேல் பழிபோடுவதில் பயனில்லை. முஸ்லிம் மக்களுக்கு என்ன நடந்தாலும் இறுதியில் வாக்கு எங்களுக்கு என்ற நிலைப்பாட்டிலேயே தற்போதைய அரசாங்கம் உள்ளது.

ஆகவே, எங்களுக்குச் சக்தி வாய்ந்த, உறுதியான ஒரு ஆட்சி தேவை, அதுமட்டுமல்ல நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச்செல்லக்கூடிய ஆற்றல் மிக்க தலைமைத்துவம் தேவை, அதனால் எதிர்காலத்தில் முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.